கோயம்புத்தூர் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், கோயம்புத்தூர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாலஸ்தீன போரில் 45,000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுவது மட்டுமல்லாமல் நேரடி போரிலும் ஈடுபட்டிருப்பது உலக அளவில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை, ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்தே பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக செயல்பட்டது.
பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்துள்ளது. தற்போதுள்ள மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைபாட்டை மேற்கொண்டிருப்பது இந்தியாவின் அணிசேரா கொள்கைக்கு எதிரானது; இன அழிப்புக்கு ஆதரவு அளிக்கும் போக்கு. மத்திய அரசு இந்த நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும். இதற்காக நாளை(அக். 7) நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம்.
காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் ஆலை தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காண, அமைச்சர்களுக்கு அறிவுறுத்திய முதலமைச்சருக்கு நன்றி. கோயம்புத்தூரில் பழங்குடி மக்கள் வசிக்கும் பெரியநாயக்கன்பாளையம், ஆனைக்கட்டி, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் வசிப்பிடங்களை தனியார் விடுதி நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். சுடுகாடு உட்பட பல இடத்தை ஆக்கிரமிப்பு செய்கிற போக்கு அதிகரித்து வருகிறது.
காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை ஆகிய அனைவரும் தனியார் விடுதிக்கு ஆதரவாக இருப்பது நல்லதல்ல. இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஈஷா மையம், தங்களுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வரை சென்று விசாரணைக்கு தடை வாங்கி உள்ளது. ஈஷா மீது தவறு இல்லையென்றால் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.