சென்னை: சென்னை மதுரவாயலில் உள்ள சின்னப் போரூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சிக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், SCHOOL என்ற தனியார் தொண்டு நிறுவனம் வளசரவாக்கம், ராயபுரம், தேனாம்பேட்டை, மணலி, கோடம்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்கியது.
அதன்படி, ஆக்சிஜன் கருவி, ஸ்கேன் செய்யும் கருவி, ஹீமோகுளோபின் மீட்டர், ஐஸ் பேக், குளிரூட்டும் கருவி உள்ளிட்ட உபகரணங்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “SCHOOL என்ற தனியார் தொண்டு நிறுவனம் மருத்துவ உபகரணங்களை கொடுத்துள்ளனர். மதுரவாயல் பகுதியில் 3,000 சதுர கி.மீட்டர் பரப்பளவில் நமக்கு நாமே திட்டத்தின் நூலகம் கட்ட இருக்கிறோம். சென்னையின் பிரதான பகுதிகளில் 90 சதவீத மழைநீர் வடிகால் பணி நிறைவடைந்துள்ளது. அதேநேரம், சென்னையின் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.