தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

" தமிழ்நாட்டை பிரிக்க 50 ஆண்டுகளாக முயற்சி" இந்தி மாத நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பகிரங்க குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்க கடந்த 50 ஆண்டுகளாக நடக்கும் தொடர்முயற்சி தோல்வி அடைந்துள்ளது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி பேசியுள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி (Credits - ETV Bharat Tamilnadu)

சென்னை: கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரிக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், மூன்றாவது மொழியை அனுமதிக்காததன் மூலம் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்தை பிரிக்க முயற்சி செய்வதாகவும் தமிழக ஆளுநர் ரவி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

'தமிழ்.. தமிழ்' என கூச்சலிடும் நபர்கள் மக்கள் மத்தியில் அரசியல் மட்டுமே செய்வதாகவும், ,தமிழகத்தை விட்டு தமிழை வெளியே எடுத்து செல்ல அவர்கள் எந்தவொரு முயற்சியும் செய்யவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் டிடி தொலைக்காட்சியின் பிராந்திய அலுவலகத்தில் இந்தி மாதம் கொண்டாட்டங்களின் நிறைவு விழா மற்றும் சென்னை தொலைகாட்சி பொன்விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சி தொடங்கும் முன், தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது "தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து குத்துவிளக்கினை ஏற்றிய ஆளுநர் ரவி விருதுகளை வழங்கி பேசியதாவது:

'இந்தி திணிக்கப்படவில்லை':கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் இந்தி மொழி கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் இந்த நிறைவு விழாவில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி ,இந்தி மொழி விழா கொண்டாடப்படுவது மூலம் இந்தி மொழி திணிக்கப்படுகிறது என கூறுகின்றனர் இந்தியாவில் உள்ள அனைத்து மொழியும் கொண்டாடப்பட வேண்டியவை எனவே இந்தி மொழி திணிக்க்கபடவில்லை.

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் என பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளேன் தமிழ்நாட்டில் இந்தி மொழி கற்க மிக பெரிய ஆர்வம் உள்ளது. நான் இங்கு வந்த நேரத்தில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு என கூறினார்கள். ஆனால் மக்களை பார்க்கும்போது அப்படி இல்லை என தெரிந்துக் கொண்டேன்.

இந்தி திணிக்கும் மொழி அல்ல. ஒவ்வொரு மொழியும் முக்கியமானது. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த பெருமை உள்ளது. காலனித்துவ ஆட்சியாளர்கள் ஆங்கிலத்தை ஊக்குவித்தபோது அவற்றை இழிவுபடுத்தும் வகையில் சொற்களைப் பயன்படுத்தி நமது மொழிகளை ஒடுக்க முயன்றனர். அவர்கள் இந்திய மொழிகளை இழிவான வார்த்தைகளால் முத்திரை குத்துகிறார்கள். ஆனால் இந்திய மொழிகள் தாழ்ந்தவை அல்ல. அவை ஐரோப்பாவை விட மிகவும் பழமையான நாகரிகங்களைக் குறிக்கின்றன. ஐரோப்பியர்கள் இன்னும் பழமையான நிலையில் இருந்தபோது, ​​​​நம் முன்னோர்கள் அழகான இலக்கியங்களையும் தத்துவப் படைப்புகளையும் இயற்றினர்.

'ஆங்கிலத்தை விட சிறந்த தமிழ்':ஆங்கிலேயர்கள் இந்தியாவில் உள்ள மொழிகளை VERNACULAR மொழி என கூறினார்கள். அப்படியென்றால் அடிமைகள் மொழி என அர்த்தம். இதற்கு பாரதியார் மிகப் பெரிய எதிர்ப்பை தெரிவித்தார். தமிழ் ஆங்கிலத்தைவிட அறிவியல் ரீதியாகவும், கலாச்சாரம் ரீதியாகவும் சிறந்தது என கூறினார்.

ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு சென்றாலும் ஆங்கில மொழிக்கு நாம் அடிமையாக இருந்தோம். அதனால் இந்தியாவின் மொழிகள் பெரிய அளவில் வளரவில்லை. பிரதமர் மோடி ஆட்சியின்கீழ் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ் மிக பழமை வாய்ந்த மொழி; அதில் நாம் பெருமைப்படுகிறேன்.

'தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி':கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . கடந்த 50 ஆண்டுகளில் மக்கள் மத்தியில் விஷம் பரப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து சமஸ்கிருதம் நீக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்கவே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்தியா எப்போதும் ஒன்றாகவே உள்ளது. இந்த நாட்டை பிரிக்க முடியாது; அது பல்லாயிரம் ஆண்டுகளாக ஒன்றுபட்டது. இந்த ஒற்றுமையை உடைக்கும் முயற்சிகள் கடந்த காலங்களில் தோல்வியடைந்தன.அவை தொடர்ந்து தோல்வியடையும். இந்தியாவின் ஆன்மிக மற்றும் கலாச்சார வரலாற்றில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்றியுள்ளது. தமிழ் கவிஞர்களும் சிந்தனையாளர்களும் ஒட்டுமொத்த தேசத்தையும் ஊக்கப்படுத்தியுள்ளனர்.

'தமிழை வளர்க்க என்ன செய்தார்கள்?':கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. தமிழ்.. தமிழ்.. என பேசும் நபர்கள் இந்தியாவில் தமிழகத்தை விட்டு வெளியே தமிழை எடுத்து செல்ல என்ன செய்தனர்? தமிழ்.. தமிழ்.. என பேசும் நபர்கள் தமிழ் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை.

தமிழை வளர்ப்பதாக சிலர் பெருமையாக பேசினாலும், தற்போதைய அரசாங்கத்தின் முயற்சிகள்தான் தமிழை உலக அரங்கிற்கு கொண்டு சென்றுள்ளது. பிரதமர் மோடி ஹார்வர்டு, சிங்கப்பூர் போன்ற நிறுவனங்களில் தமிழ் ஆய்வு மையங்களை நிறுவியுள்ளார். செம்மொழி தமிழ் நிறுவனத்திற்கான புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

அரசியல் வட்டாரங்களில் இருந்து சத்தம் எழுப்பினாலும், தமிழை உண்மையாக வளர்க்க மிகக் குறைவாகவே செய்யப்பட்டுள்ளது. பல தமிழ் நிறுவனங்களின் கல்வித் தரம் இன்னும் திருப்திகரமாக இல்லை. உணர்வுபூர்வமான அரசியல் மட்டுமல்ல, உண்மையான முயற்சிகள் மூலம்தான் தமிழகத்தின் பெருமையையும், மக்களின் பெருமையையும் உயர்த்தி பாதுகாக்க முடியும் என்று ஆளுநர் ரவி பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details