நீலகிரி: நாடாளுமன்றத் தேர்தல் கேரளாவில் ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில், சுல்தான் பத்தேரி பகுதியில் இன்று (ஏப்.15) தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதனால், மைசூரில் இருந்து பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட கூடலூரில், தாளூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார்.
அங்கு, நீலகிரி தொகுதிக்குட்பட்ட தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டுக்கு வருவதும், தமிழக மக்களை சந்திப்பதும் மகிழ்ச்சியளிக்கின்றது. பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஒலிம்பிக் நடத்துவது மற்றும் நிலவுக்கு அனுப்புவது குறித்த அறிக்கை மட்டுமே உள்ளது. ஏழை மக்களுக்கு என்று எந்த திட்டமும் இல்லை.
ஜனநாயகத்தை காக்க மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். பாஜக அரசு விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கு எதிரானது. ஒரே நாடு, ஒரு தலைவர் என தவறாக வழிநடத்தப் பார்க்கிறார் பிரதமர் மோடி. பாஜக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுகிறது. தமிழர்களின் மொழி, கலாச்சாரத்தை ஒழிப்பதற்கு அவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்தியாவின் பன்முக தன்மையில், மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை அழிப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை. ஒரு பக்கம் இந்திய மக்களும், மறுபக்கம் ஆர்.எஸ்.எஸ் கொள்கை என உள்ளது. இதுதான் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக கட்சிக்கு இடையே உள்ள வேறுபாடு என்றார்.
இக்கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் கார்த்திக் தங்க பாலு, மஞ்சூர் நாகராஜ், உதவி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேசன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தாளூரில் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் பறக்கும்படையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் தலைவர்கள்.. இன்று மாலை நெல்லை வரும் பிரதமர் மோடி! - Lok Sabha Election