தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“சீரியஸாக இருந்த பிரதமர் நகைச்சுவை அடிக்க ஆரம்பித்துவிட்டார்”.. எம்பி திருநாவுக்கரசர்! - Congress Mp thirunavukkarasar - CONGRESS MP THIRUNAVUKKARASAR

Congress MP Thirunavukkarasar: சீரியஸாக பேசிக்கொண்டு இருந்த பிரதமர் தற்போது நகைச்சுவை அடிக்க ஆரம்பித்துவிட்டார் என்றும், பிரதமர் தான் மனித பிறவி அல்ல என்று கூறியதை இந்த நூற்றாண்டின் நகைச்சுவை என்று எடுத்துக்கொள்ளலாம் என்று காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

எம் பி திருநாவுக்கரசர் புகைப்படம்
எம் பி திருநாவுக்கரசர் புகைப்படம் (credits -ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 7:00 PM IST

சென்னை: சி.பா.ஆதித்தனாரின் 43வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “ஆதித்தனார் தன் வாழ்நாள் முழுவதும் தமிழர்கள் நலனுக்காக, தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர். அவரது குடும்பத்தினர் அனைவரும் பத்திரிகை துறையில் ஜாம்பவான்களாக திகழ்வதற்கு அஸ்திவாரம் இட்டு, தமிழர்கள் நலன் தொடர்ந்து காத்து வரும் ஆதித்தனார் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” என்றார்.

பிரதமர் தான் மனித பிறவி அல்ல என்று கூறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “சீரியஸாக பேசிக்கொண்டு இருந்த பிரதமர் தற்போது நகைச்சுவை அடிக்க ஆரம்பித்துவிட்டார். பிரதமர் தான் மனித பிறவி அல்ல என்று கூறியதை இந்த நூற்றாண்டின் நகைச்சுவை என்று எடுத்துக்கொள்ளலாம். இதை அறிவு பூர்வமாக சிந்திப்பவர்கள் யாரும் அதை ஏற்க மாட்டார்கள். உலகத்தில் பிறந்த மனிதர் யாரும் தன்னை அவதார புருஷராக சொல்லிக்கொள்வது மிக பெரிய நகைச்சுவையாகும்” என்றார்.

கட்சியில் பழைய தலைவர்களை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கூறியது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பழைய தலைவர்களை நீக்க வேண்டும் என்று சொல்லி இருப்பது மாவட்ட தலைவர்களை, நிர்வாகிகளை மாற்றுவது அவர்கள் வேகமாக செயல்பட வேண்டும் என்பதற்காக தான். இது காங்கிரஸ் கட்சியில் மட்டுமல்லாமல், அனைத்து கட்சியிலும் இந்தியா முழுவதும் நடைபெறும்.

அனைவரையும் மாற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. சிலரை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கூறியுள்ளார். இது கட்சி வளர்ச்சியின் தொடர் நடவடிக்கை. மேலும், தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி ஏற்படுத்துவோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் சொல்வது இயற்கை. இதனை முன்னாள் இருந்த அனைத்து தலைவர்களும் கூறியுள்ளனர். தற்போது செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க:பீலா வெங்கடேசன் அளித்த புகாரில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் அதிரடி கைது! - Former DGP Rajesh Das

ABOUT THE AUTHOR

...view details