தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரம் ஆதீனம் விவகாரம்; 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு! - Dharmapuram Adheenam Case - DHARMAPURAM ADHEENAM CASE

Conditional bail in dharmapuram adheenam case: தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச ஆடியோ, வீடியோ உள்ளதாக பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் சிறையில் இருந்த 3 பேர் 90 நாட்களுக்குப் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட 3 பேர்
நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட 3 பேர் (Credits: ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 10:51 PM IST

மயிலாடுதுறை:தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச ஆடியோ, வீடியோ உள்ளதாக பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் சிறையில் இருந்த 3 பேருக்கும், தினமும் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இன்று (மே 28) ஜாமீன் வழங்கி மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் பேட்டி (Credits: ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு சிலர் மிரட்டியதாக புகார் எழுந்தது.

இந்த வழக்கில் மயிலாடுதுறை போலீஸார், மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், திருக்கடையூர் விஜயகுமார், ஆடுதுறை வினோத், ஆதீனகர்த்தரின் உதவியாளர் செந்தில், திருவெண்காடு சம்பா கட்டளையைச் சேர்ந்த விக்னேஷ், செம்பனார்கோயில் தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ், திருச்சியைச் சேர்ந்த பிரபாகர் ஆகிய 9 பேர் மீது கடந்த பிப்.28ஆம் தேதி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

இதில் அகோரம், குடியரசு, ஸ்ரீநிவாஸ், விக்னேஷ், வினோத் ஆகிய 5 பேரை கைது செய்து மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனர். இவர்களுள் மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், மே 9ம் தேதி திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஸ்ரீநிவாஸ் கடந்த மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து வினோத், விக்னேஷ், குடியரசு ஆகிய 3 பேரும் ஜாமீன் கேட்டு மயிலாடுதுறை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பலமுறை விண்ணப்பித்தும் ஜாமீன் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் தவிர்த்த மற்ற மூன்று பேரும் கைது செய்யப்பட்டு, 90 நாட்கள் முடிவடைந்த நிலையில், இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் உள்ள நிலையில், 3 பேருக்கும் ஜாமீன் அளித்து மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார்.

மேலும், இவர்கள் மூவரும் தினந்தோறும் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 3 பேரும் மயிலாடுதுறை கிளைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: மசாஜ் சென்டரில் திருட்டு.. லாட்ஜில் லாக் செய்த போலீசார் - சென்னையில் நடந்தது என்ன? - Velachery Massage Center Theft

ABOUT THE AUTHOR

...view details