தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு..மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு புகார்! - complaint against Mahavishnu - COMPLAINT AGAINST MAHAVISHNU

complaint against Mahavishnu: அரசு பள்ளியில் மகாவிஷ்ணு ஆற்றிய சொற்பொழிவில் மாற்றுத்திறனாளிகளை இழிவுப்படுத்தி பேசியதாக மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கம் சார்பில் திருவெற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மகாவிஷ்ணு மீது புகார் அளித்த மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தினர்
மகாவிஷ்ணு மீது புகார் அளித்த மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தினர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2024, 6:07 PM IST

சென்னை:அரசு பள்ளிகளில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக, மகாவிஷ்ணு மீது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது திருவொற்றியூர் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் மாநில தலைவர் சரவணன் புகார் அளித்துள்ளார்.

பரம்பொருள் பவுண்டேஷன் சார்பாக சென்னைஅசோக் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு என்ற இளைஞர் சொற்பொழிவு நடத்தியுள்ளார். அதில், ஆன்மீகம், பாவ - புண்ணியம் தொடர்பான கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில், பாவ- புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

குறிப்பாக, “மாற்றுத்திறனாளிகள் கை மற்றும் கால்கள் இல்லாமல் பிறப்பதற்கு காரணம், முன் ஜென்மத்தில் அவர்கள் செய்த பாவ-புண்ணியம் தான், இந்த ஜென்மத்தில் அவர்களுக்கு இது போன்ற ஒரு பிறப்பு இருக்கின்றது” என மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசியுள்ளார். மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கரை மகாவிஷ்ணு மிரட்டும் வகையில் பேசியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். மாற்றுத்திறனாளிகளை அவமதித்தை கண்டித்து, மகாவிஷ்ணு மீது மாற்றுத் திறனாளிகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், அவரை கைது செய்ய வேண்டும் என ஏற்கனவே சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் உதவி ஆணையர் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளை அவமதித்தை கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கம் சார்பாக திருவெற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக மகாவிஷ்ணு உரையாற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசியதாக கூறி புகார் கொடுத்த சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு; ரகசிய இடத்தில் போலீஸ் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details