விழுப்புரம்: தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான து.ராஜா, விழுப்புரம் தனி நாடாளுமன்றத் தொகுதியில் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் ரவிக்குமாரை ஆதரித்து, இன்று (ஏப்.09) திருக்கோவிலூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதற்கு முன்னதாக விழுப்புரத்தில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் பாசிச மதவெறி ஆட்சி முற்றிலும் ஒழிய வேண்டும் என்றால், பாஜக அரசினை நாட்டில் இருந்து அகற்ற வேண்டும்.
நாட்டில் மோடி அரசினால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். மோடி நிதானம் இழந்து, வெறுப்பு அரசியல் செய்து வருகிறார். அவர் சொல்லும் வாக்குறுதி அனைத்தும் பொய் என்று சாதாரண மக்கள் கூட சொல்லி புலம்புகின்றனர். மோடி தலைமையிலான அரசு எப்படி செயல்படுகிறது என்று பத்திரிகை வாயிலாக பட்டியலிட்டு இருக்கின்றது. இதுவே, இந்த அரசின் அவலம். இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட மோடி பேசவில்லை.
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கைக்கூலியாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியாவினை மதவாத நாடாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளோடு பாஜக அரசு செயல்படுகிறது. அம்பேத்கர் இயற்றிய சட்டங்களைத் தூக்கி எறிந்து விட்டு பெரும் முதலாளிகளுக்கு சாதகமாகச் சட்டங்களை மாற்றி ஆட்சி செய்து வருகின்றார் மோடி.
இந்தியாவில் உள்ள பட்டினி வேலையின்மை போராட்டம் குறித்து உலக நாடுகள் எல்லாம் பார்த்து வருகின்றன. இதையெல்லாம் மறைக்க மோடி வாய்ச்சவடால் அரசியல் செய்து வருகிறார். இந்தியாவைக் காத்திட, பாசிசத்தை அகற்றிட நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்" என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ச்சியாக பேசிய அவர், “இந்தியா கூட்டணிக்கு தமிழ்நாட்டில் மக்கள் பெருமளவு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். தேர்தல் களத்தில் பாஜக அரசின் கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வரவேற்கக்கூடிய தேர்தல் அறிக்கை.
மோடி, கம்யூனிஸ்ட் கட்சி பயங்கரவாத சித்தாந்தம் என்ற மனநிலையில் உள்ளவர். இந்திய நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால், மாநில அரசு ஒரு அங்கம் என்று நினைக்க வேண்டும். மோடி செய்வது சர்வாதிகார ஆட்சி. மாநில முடிவு அதிகாரங்களை அபகரித்துக் கொண்டுள்ளார். மாநில அரசுகளிடம் நிதிகளைப் பெற்றுக்கொண்டு, முறையான நிதிகள் வழங்காமல் வெள்ளப் பேரிடர் காலங்களில் உதவாத அரசாக பாஜக அரசு இருந்து வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயரை வைத்துக்கொண்டு அதானிக்கும், அம்பானிக்கும் கால் பிடிக்கும் பாஜக அரசோடு நீங்கள் கூட்டணி சேர்ந்திருக்கலாமா? பாட்டாளி மக்கள் கட்சி இன்று அசிங்கப்பட்டு நிற்கிறது. மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
விடுதலைச் சிறுத்தை கட்சி, ஆர்எஸ்எஸ்-க்கு எதிராகவும், சனாதனத்திற்கு எதிராகவும் மக்களுக்காகப் போராடி வருகிறது. கொள்கைப் புரிதலோடு மற்ற மாநிலங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விடுதலை சிறுத்தை கட்சி திகழ்கிறது இதை இந்தியா கூட்டணி உணர்த்துகின்றது.
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது ஒரு பிரச்னையே இல்லை. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அரசியல் புரிதல் இருக்கிறது. எப்படி ஒன்றுபட்டு கூட்டணி அமைத்துள்ளமோ, அதேபோல் ஒன்றுபட்டு பிரதமரைத் தேர்ந்தெடுப்போம். பாஜகவில் மோடி பிரதமர் இல்லை என்றால், அடுத்து யார் என்று இவர்கள் பேசத் தயாரா?" என்று கேள்வியெழுப்பினார்.
இதையும் படிங்க:தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மு.க.ஸ்டாலின் மீது அதிமுக புகார்!