தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புறப்பட்டாரா ஸ்டாலின்? அமெரிக்காவில் 17 நாட்கள்.. முதல்வர் பயணத்தை உற்றுநோக்கும் எதிர்க்கட்சிகள்! - MK Stalin America Visit

CM MK Stalin America visit: வெளிநாடு பயணம் தொடர்பாக எதிர்கட்சிகள் பல்வேறு கேள்வி எழுப்பி வரும் நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் 17 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்படவுள்ளார்.

தலைமை செயலகம், முதல்வர் (கோப்புப்படம்)
தலைமை செயலகம், முதல்வர் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2024, 12:56 PM IST

சென்னை: முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தில் தொழில் முதலீட்டு சம்பந்தமாக நடைபெறும் சந்திப்புகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தொழில் முதலீடு சம்பந்தமாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஏற்கனவே வெளிநாடு சென்றுவிட்டார்.

கடந்த ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் தொடர்சியாக, தொழில் தொடர்பாக முதலீட்டாளர்களைச் சந்திக்க முதலமைச்சர் வெளிநாடு செல்லவுள்ள நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார். அதன்படி, இன்று இரவு 10 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு முதல்வர் செல்லவிருக்கிறார். அதற்கு முன்னதாக, இன்று இரவு 8.30 மணி அளவில், சென்னை பழைய விமான நிலையம் வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

மேலும், அமெரிக்க தமிழ் சங்கத்தினருடன் சந்திப்பு, சான் பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாடு, வெளிநாடு வாழ் தமிழர்கள் உடன் கலந்துரையாடல், சிகாகோ பயணம், அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகள் சந்திப்பு ஆகியவை முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் முக்கியமாக உள்ளது.

மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் எனச் சொல்லி வரும் நிலையில், அதற்கான முயற்சி தான் இந்த வெளிநாடு சுற்றுப்பயணம் எனவும் பார்க்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் முதலீட்டாளர்கள் சம்பந்தமாக வெளிநாட்டு பயணம் செல்வது இது முதல் முறை அல்ல, இதற்கு முன்னரும் சென்றிருக்கிறார்.

முதலமைச்சர் வெளிநாட்டு பயணம்:2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 நாட்கள் பயணமாக துபாய் புறப்பட்டுச் சென்றார். 6,100 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு மே மாதம் 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார். இதில் 1,342 கோடி ரூபாய் முதலீடுகள் பெறப்பட்டது. இதன் மூலமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரியில் ஸ்பெயின் நாட்டிற்கு 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதன் மூலம் 3,440 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொழில் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு (அமெரிக்கா) சென்றிருக்கிறார். மீண்டும் வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில் முதலீட்டாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர், தனது அமெரிக்கா பயணத்தை நிறைவு செய்துவிட்டு, வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி காலை 8.15 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் வழியாக சென்னை திரும்புவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விசிட்டிங் கார்டு மூலம் கொக்கி.. வடமாநிலத்தவரே குறி.. திருப்பத்தூர் கும்பல் கேரளாவில் சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details