சென்னை: சென்னையில் கோலகலமாக நடந்த "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா" கலை நிகழ்ச்சிகள் சென்னையில் உள்ள 5 மின்னணு வீடியோ வாகனங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிலையில், 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கிராமியக் கலைஞர்கள் ஒரு நாள் ஊதியத்தை, ரூ.5 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி கலை பண்பாட்டுத்துறை சார்பில், கடந்த 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது. சென்னை, கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் இந்தாண்டிற்கான 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
சென்னையில் உள்ள 18 இடங்களில் ஜனவரி 14 முதல் 17 வரை நான்கு நாட்கள் மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சி, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில், தற்போது 1,500 கிராமிய கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம் ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.