சென்னை:கல்வி, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி தர மறுப்பதா? என்று கேள்வி எழுப்பியுள்ள முதல்வர் ஸ்டாலின், சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததற்கு மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி தர மறுப்பதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் மத்திய அரசு சார்பில் நிதி விடுவிக்கப்பட வேண்டும். ஆனால், கல்வி, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மறுக்கிறது.
தேசிய கல்விக் கொள்கையை திணிக்க முயற்சி: மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் தமிழ்நாட்டுக்கு எஸ்எஸ்ஏ (Samagra Shiksha Scheme) திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தாமதம் செய்கிறது. தேசிய கல்விக் கொள்கையை (NEP) வலுக்கட்டாயமாக ஏற்க வைக்கும் முயற்சியாகவும், தலைவணங்க மறுத்ததற்காகவும் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை பாஜக மறுக்கிறது.
அதே நேரத்தில் கல்வியில் குறிப்பிட்ட இலக்கை அடையாதவர்களுக்கு தாராளமாக நிதியை பாஜக அளிக்கிறது. தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்த மத்திய பாஜக அரசின் திட்டம் இதுதானா? இதுபற்றி நம் நாட்டு மக்களே முடிவெடுக்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், தனியார் பத்திரிகை நிறுவனத்தில் வெளியான ரிப்போர்ட் ஒன்றையும் இணைத்துள்ளார். அதில், தேசிய குடும்பநலத் துறை சர்வே 2019-2020ஐ குறிப்பிட்டு, கல்வியில் அதிக முன்னேற்றம் கண்டுள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு பிஎம் ஸ்ரீ திட்டம் மூலம் உரிய நிதியை வழங்க மறுக்கிறது என பதிவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இன்னும் இணையவில்லை. இதனால் பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு கல்வி உட்கட்டமைப்புகளுக்காக வழங்கப்படும் நிதி இன்னும் மத்திய அரசால் வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.