மதுரை: சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் 20ஆம் ஆண்டு நினைவு ஸ்தூபி திறப்பு விழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவாய், சூரியகாந்த், சுந்தரேசன், விஸ்வநாதன், மகாதேவன் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோரும், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.
அப்போது, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் 20ஆம் ஆண்டு நினைவு ஸ்தூபியை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், 'மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு' என்ற பெயர் பலகையை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் திறந்து வைத்தார். முன்னதாக 'மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளை' என இருந்த பெயர் தற்போது 'மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும், விழாவில் தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் 200 இ-சேவா மையங்களும் திறக்கப்பட்டன. விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் பேசுகையில், "ஔவையார், அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல் என குறிப்பிட்டுள்ளார்.
இயன்றவரை பிறருக்கு உதவுவது நல்லது. மதுரை தூங்காநகரம், 24 மணி நேரமும் விழித்துக் கொண்டு இருக்கும் நகரம் மதுரை. தமிழ் கலாச்சாரத்தின் நல்ல இயல்புகள் எப்போதுமே மகிழ்ச்சி அளிப்பவை. சென்னை உயர் நீதிமன்றம் ஆலமரம் போன்றது. நேற்று நாலடியாரின் ஆங்கில பதிப்பு எனக்கு கிடைத்தது. அதில் நம்பிக்கை குறித்து குறிப்பிடப்பட்ட விசயம் உண்மையானது. வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் உற்றுநோக்கும் வண்ணம் மதுரைக்கிளையின் பல உத்தரவுகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் மதுரைக்கிளை அமைந்துள்ளது.