சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் மாணவர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில், "மாவட்ட அளவில் கல்விக்குறித்த மேம்பாட்டு ஆய்வுகளை நடத்துவதற்கும், மதிப்பீடுகளை ஆய்வு செய்யவும் பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மாவட்டத்தில் கல்வியின் தரத்தை முறையாக மேம்படுத்தவும், விரிவான சீர்திருத்தங்கள் மூலம் சமூக மேம்பாட்டை ஏற்படுத்தவும், மாநிலத்தின் நோக்கத்துடன் இணங்கவும் வடிவமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி மறு ஆய்வுக்கான புதிதாக வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை போன்ற அமைப்புகளின் ஆய்வுக் கூட்டங்களைப் போன்று, மாவட்டக் கல்வி மதிப்பாய்வு மாதந்தோறும் நடத்தப்படும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் தலைவர் என்ற முறையில், மதிப்பாய்வில் முக்கியப்பங்கு உள்ளது.
மேலும் அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைப்பின் மூலம் தற்போதுள்ள கல்வி முறைகளை முழுமையாகப் பெற்றிருப்பதையும், முழுமையாக அறிந்திருப்பதையும், எதிர்காலத்தின் கல்வித் தேவைகளை மாற்றியமைக்கும் வகையில் மேம்படுத்துவதையும் உறுதி செய்யும். மதிப்பாய்வு மூன்று முதன்மைக் கருப்பொருள்களில் கவனம் செலுத்த வேண்டும்.
பள்ளியின் உட்கட்டமைப்பின் படி மதிப்பீடு செய்தல், பராமரித்தல், தேவையான பள்ளி வசதிகளை உருவாக்குதல் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும். இது தொடர்பாக, பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் போன்ற தொடர்புடைய துறைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வேண்டும்.