சென்னை: நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது விசை படகையும் விடுவிக்கக்கோரி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் IND-TN-06-MM-1054 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நேற்று (23-08-2024) இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை தான் ஏற்கெனவே பலமுறை சுட்டிக்காட்டியுள்ளதாகவும், 2024-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 324 மீனவர்களும், 44 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இதுபோன்ற தொடர் கைது நடவடிக்கைகளால் தமிழ்நாட்டு மீனவ சமூகத்தினர் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருவதுடன் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.