சென்னை:சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 1.40 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானத்தில் பயணிப்பதற்காக 174 பயணிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றிரவு 11 மணிக்கு முன்னதாகவே வந்துவிட்டனர். அவர்கள் சுங்கச் சோதனை, குடியுரிமைச் சோதனை உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.
சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் வழக்கமாக சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு இரவு 11.40 மணிக்கு வந்துவிட்டு, அதே விமானம் மீண்டும் அதிகாலை 1.40 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் செல்லும். ஆனால் நேற்று அந்த விமானம் சற்று தாமதமாக நள்ளிரவு 12.21 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது.
இதையும் படிங்க :நிபா வைரஸ் பாதிப்பு; தமிழக - கேரள எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய சுகாதாரத்துறை! - Nipah Virus Attack In Kerala
அப்போது அந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்த பின்பு விமானத்தை இயக்க வேண்டும் என்று விமானி குறிப்பு எழுதி வைத்து விட்டார். இதை அடுத்து சிங்கப்பூர் செல்ல இருந்த விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வு அறைகளில் காத்திருந்தனர்.
விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு இன்று காலை 5 மணிக்கு புறப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்பு 8 மணிக்கு புறப்படும் என்று அறிவித்தனர். இதையடுத்து அந்த விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு இன்று காலை 10.40 மணிக்கு புறப்பட்டு சென்றது.
இதனால் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சுமார் 9 மணி நேரத்துக்கு மேலாக தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் சிங்கப்பூர் செல்ல வந்திருந்த 174 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் பல மணி நேரங்களாக காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.