சென்னை: சென்னையில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். சென்னையில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு, இன்று காலை மர்ம நபர் ஒருவர் “இன்னும் சற்று நேரத்தில் உங்கள் பள்ளி வெடித்து சிதறப் போகிறது” என்று மெயில் ஒன்றை அனுப்பி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டை தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.
சென்னை முகப்பேரை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தனியார் பள்ளி வளாகத்தில், போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை முடித்துவிட்டு, எந்த ஒரு சந்தேகத்திற்கிடமான பொருளும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். அதேபோல் பூந்தமல்லி, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் செயல்பட்டு வரும் அதே பள்ளியில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.