சென்னை: சென்னை மாநகரில் கடந்த நான்கு வருடங்களில் மட்டும் திருடப்பட்ட இருசக்கர வாகனங்களில் 3,200 வாகனங்களை போலீசாரால் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. மேலும், சென்னையில் திருடப்படும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் வழிப்பறி, செல்ஃபோன் பறிப்பு, செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் குற்றவாளிகள் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருடப்படும் இருசக்கர வாகனங்களை விரைவாக கண்டுபிடிக்கவும், இனிமேல் இருசக்கர வாகன திருட்டு நடக்காமல் தடுக்கவும் ஐ.வி.எம்.எஸ் என்ற புதிய கண்காணிப்பு கேமரா தொழில்நுட்பத்தை 1.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்டு சென்னையில் சில இடங்களில் காவல்துறையினர் அமைத்துள்ளனர்.
முதல்கட்டமாக சென்னை மாநகரில் 28 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 100 கேமராக்களை இணைத்து கண்காணிப்பு பணியை போலீசார் மேற்கொண்டுள்ளனர். மேலும், 80 இடங்களில் நிலையான கேமராக்களை பொருத்தியும் 50 இடங்களில் வாகனங்களில் நகரும் நவீன கேமராக்களை பொருத்தியும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.