தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“அமெரிக்க தொழில்நுட்பத்தால் கூவம் ஆறு மறுசீரமைக்கப்படும்”- மேயர் பிரியா உறுதி! - Koovam River Renovation - KOOVAM RIVER RENOVATION

Mayor Priya on Cooum river renovation: அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கூவம் ஆற்றை 735 கோடி ரூபாய் மதிப்பிட்டில் மறுசீரமைக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

மேயர் பிரியா கோப்புப் படம்
மேயர் பிரியா கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 7:26 PM IST

சென்னை:சென்னை ரிப்பன் மாளிகையில் மாதாந்திர மாமன்றக் கூட்டமானது மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த மாமன்றக் கூட்டத்தில் நேரமில்லா நேரத்தின் போது, மாமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மேயர் பிரியா பதில் அளித்தார்.

அப்போது பேசிய மேயர் பிரியா, “எம்ஜிஆர் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு கழிவுநீர் கால்வாய் பணிகள் நெடுஞ்சாலைத் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தப்படாமல் 20 நாட்களில் அந்த பணி முடிக்கப்படும். மேலும், மின்சாரத்துறை சார்பாக 200 மீட்டர் தூரத்திற்கு கேபிள் புதைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளும் ஒரு மாதத்தில் முடிக்கப்படும்.

அதேபோல, இரண்டு மாதத்தில் சென்னையில் உள்ள அனைத்து விளையாட்டு திடல்களிலும் வாட்ச்மேன் நியமிக்கப்பட உள்ளனர். நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது போல், பெண்களுக்கு என தனியாக உடற்பயிற்சிக் கூடம் கட்டுவதற்கான தனி பட்ஜெட்டை ஒதுக்கி இருக்கிறோம்.

மேலும், நீர்வளத்துறை, ஆதாரத்துறையோடு இணைந்து 735 கோடி மதிப்பீட்டில் கூவம் ஆற்றை மறுசீரமைக்க உள்ளது. சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சென்னை வந்த போது, கூவம் ஆற்றை அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு மறுசீரமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும்.

ஆற்காடு சாலையில் நடைபெற்று வரும் மெட்ரோ பணியின் போது விடுபட்டு போன கால்வாய் பணிகளை மெட்ரோ அதிகாரிகள் செய்து தருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், மழை காலத்தில் 50 HP மற்றும் 100 HP மேட்டார்களைக் கொடுப்பதாகவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், பக்கிங்காம் கால்வாயில் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறு தொடந்து கண்காணிக்கப்படும். மேலும், நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒரு ஆண்டு தான் அரசாணை வந்துள்ளது. இது குறித்து அரசிற்கு தெரிவித்து, நகர்ப்புற வேலைவாய்ப்புகளை தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, வார்டு எண் 61 மாமன்ற உறுப்பினர் பாத்திமா வைத்த கோரிக்கையை ஏற்று, அடுத்த மாமன்றக் கூட்டத்திற்குள் அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் டிஜிட்டல் கையடக்க கணினி (Tab) வழங்கப்படும்.

மேலும், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக உள்ள ஆசிரியர்களுக்கு கடந்த கால ஊதியங்கள் வழங்கப்படும். சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி அருகே உள்ள கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்கப்படும். மணலி பகுதியில் மேயர் நிதியிலிருந்து சத்துணவு கூடம் கட்டி தரப்படும்” என மேயர் பிரியா மாமன்ற உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:“ஊராட்சி மாநகராட்சியுடன் இணைவது அவரவர் விருப்பம்”- கே.என்.நேரு பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details