சென்னை: சென்னை, வியாசர்பாடி பி.வி காலனியைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி (35). சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, போதைப் பொருள் விற்பனை செய்தல், அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இவர் கடந்த 2020ஆம் ஆண்டு குற்ற வழக்கு ஒன்றில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை வியாசர்பாடி பி.வி காலனி 18வது தெருவில் வசிக்கும் விமலா (50) என்ற பெண் எம்கேபி காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, வீட்டில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது, ஆசைத்தம்பியை படுக்கையில் அடையாளம் தெரியாத நபர்கள் கல் மற்றும் பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
பின்னர் ஆசைத்தம்பி உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விமலாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், இரவு 9 மணிக்கு கொலையைப் பார்த்த விமலா நள்ளிரவு 1 மணிக்கு அடையாளம் தெரியாத நபரின் செல்போன் எண்ணில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால், சந்தேகமடைந்த போலீசார் விமலாவைப் பிடித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரவுடி எதற்காக விமலா வீட்டிற்கு வந்தார்? அங்கு அவரை கொலை செய்தது யார்? இந்த கொலையில் விமலாவின் பங்கு என்ன? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் :சென்னையில் வசித்து வரும் 44 வயது நபருக்கு, திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வெளியில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.
அப்போது அந்த சிறுமி, அவரிடம் இருந்து தப்பித்து தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். உடனே இது குறித்து சிறுமியின் பெற்றோர் சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், அந்நபரை அழைத்து விசாரணை செய்தபோது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். பின்னர், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கஞ்சா விற்பனை: சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர் மலைப்பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சங்கர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் திருநீர்மலை, நாகல்கேணி, பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர்.