சென்னை: நடந்து முடிந்த 18வது நாடாளுமன்றத் தேர்தலில், மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன் 2 லட்சத்து 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தொகுதியின் தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தலில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்.
அதில், தேர்தல் பிரச்சாரம் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நாளன்று
பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பிரச்சாரம் மேற்கொண்டதாகவும், வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன் அமைதி காலத்தில் பிரச்சாரம் செய்வது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி எதிரானது எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், பத்திரிகை விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.58 லட்சத்து 50 ஆயிரம் செலவு செய்துள்ள நிலையில், பிரச்சார செலவு, விளம்பரச் செலவு, பூத் ஏஜென்ட்களுக்கு செலவிட்ட தொகையை முறையாக தெரிவிக்கவில்லை எனவும், தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக தயாநிதி மாறன் தேர்தலுக்கு செலவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.