தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவிகளுக்காக 16 பேராசிரியர்கள் கொண்ட குழு; சென்னை அண்ணா பல்கலை. புதிய நடவடிக்கை..! - CHENNAI ANNA UNIVERSITY

பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து மாணவிகள் நலனை பாதுகாக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழுவை சென்னை அண்ணா பல்கலைக் கழகம் அமைத்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலை (கோப்புப்படம்)
சென்னை அண்ணா பல்கலை (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2024, 4:59 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் சென்னை மாநகரை உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு இந்த வழக்கை விசாரணை செய்யும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அப்போது அண்ணா பல்கலைக் கழகம் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது. இதனை தொடர்ந்து பல்கலைக் கழகத்தில் மாணவர்களின் பாதுகாப்புச் சூழலை மேம்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டார்.

இதையடுத்து, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் இரவு 7.30 க்குள் விடுதிக்கு வந்துவிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:யார் அந்த சார்? தமிழகத்தில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.. சுற்றி வளைக்கும் போலீஸ்..!

தொடர்ந்து, அண்ணா பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாணவிகள் நலனை காக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்கலைக்கழகத்தில் உடனடியாக 40 புதிய செக்யூரிட்டிகளை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டு, ஏற்கனவே 140 செக்யூரிட்டிகள் இருக்கும் நிலையில் 180 ஆக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக் கழகத்தில் பழுதடைந்த சிசிடிவி கேமராக்களை சரி செய்து, 30 புதிய சிசிடிவிகளை பொருத்தவும், பல்கலைக்கழக வளாகத்தில் அசம்பாவிதம் நடைபெற்றுள்ளதால், அதிலிருந்து மீண்டு வர மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விடுதியில் இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விடுதிகளில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வார்டன்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பல்வேறு பணிகளுக்கு குழுக்கள் அமைத்து தேவையான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரவு 7.45 மணிக்கு ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவியை மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்த ஞானசேகரன் அதனை காட்டி இருவரையும் மிரட்டியதாகவும், பின்னர் ஆண் நண்பரை முதலில் அனுப்பி வைத்துவிட்டு, மாணவியை தனியாக ஒரு இடத்திற்கு அழைத்து சென்று ஞானசேகரன் பாலியல் வன்கொடுமை செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details