திருநெல்வேலி:நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த மே 4ஆம் தேதி உடல் பாதி எரிக்கப்பட்ட நிலையில், உவரி அருகே கரைசுத்து புதூரில் உள்ள அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த வழக்கை திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அதில் எந்த வித முன்னேற்றமும் இல்லாததால் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி சங்கர் மற்றும் காவல் ஆய்வாளர் உலக ராணி தலைமையிலான இரண்டு குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம், இதுவரையிலான விசாரணை அறிக்கையை சிபிசிஐடி ஐ.ஜி அன்புவிடம் சமர்ப்பித்து விவரங்களை தெரிவித்தனர். இந்நிலையில், இன்று சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையிலான சுமார் 30-க்கும் மேற்பட்ட தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் கரைசுத்து புதூருக்குச் சென்றனர்.