சென்னை: கள்ளக்குறிச்சி அடுத்த கருணாபுரத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயம் அருந்திய பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், கள்ளச்சாராய வழக்கில் இதுவரை 15 நபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
அதில் குறிப்பாக, மெத்தனால் விற்பனை செய்த முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மாதேஷ் என்பவரை கைது செய்த சிபிசிஐடி போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், மாதேஷ் மெத்தனால் கடத்தி வருவதும், தனி கும்பல் அமைத்து அவற்றை பதுக்கி வைத்ததும் தெரியவந்தது.
அந்த வகையில், சென்னை மாதவரம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் இருந்து மெத்தனாலை கடத்தி கொண்டு வந்து, அவற்றை பதுக்கி வைத்து கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: கணவனை இழந்து தவிக்கும் 44 பெண்கள்.. ஈடிவி பாரத் கள ஆய்வு தகவல்
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக ஹரி முத்து மற்றும் அய்யாசாமி ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் இன்று (திங்கட்கிழமை) கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இருவரும் மாதேஷ் கொடுக்கும் மெத்தனாலை மறைத்து வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி தியாகதுருகம் என்ற பகுதியில் உள்ள சாக்கடையில் மற்றும் அய்யாசாமியின் உறவினர் ஒருவரின் தோட்டத்தில் மெத்தனால் பேரல்களை மறைத்து வைத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இவர்கள் மாதேஷின் உத்தரவின் பேரில் கடத்தபட்ட மெத்தனாலை சின்னதுரை, ஜோசப் ராஜா போன்றவர்களுக்கு விற்பனை செய்ததும் சிபிசிஐடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இவர்கள் மெத்தனால் பேரல்களை வேறு எங்காவது பதுக்கியுள்ளார்களா, யாருக்கெல்லாம் விற்பனை செய்துள்ளார்கள் போன்ற கோணங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் மாதேஷ் உள்ளிட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சியில் தாய், தந்தையை இழந்த 28 குழந்தைகள்.. மீளாத் துயரில் தவிப்பு!