திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அம்பேத்கர் காலனி பகுதியைச் சேர்ந்த சிவஞானம் மனைவி நந்தினி. இவருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்த நிலையில் நான்காவது குழந்தை பிரசவத்திற்காக வெலக்கல்நத்தம், பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று காலை 10 மணி அளவில் சென்றுள்ளார்.
அப்போது பணியில் இருந்த செவிலியர்கள் பாக்கியலட்சுமி மற்றும் செந்தமிழ் ஆகியோர் நந்தினி ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர் மேலும் நான்காவது குழந்தைக்காக அட்மிட் ஆகியுள்ளார். எனவே இவருக்கு பிரசவம் பார்த்தால் பணம் ஏதும் கொடுக்க மாட்டார். அதன் காரணமாக ஏதாவது சொல்லி அவர்களை வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பி விடுங்கள், என இருவரும் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
இதனை அறிந்த நந்தினி, இதுகுறித்து உறவினர்களிடம் தெரிவித்ததாக தெரிகிறது. இதனையடுத்து, ஆத்திரத்தில் இருந்த உறவினர்கள் இதுகுறித்து செவிலியர்களிடம் கேட்டபோது, உங்களுக்கு மட்டும்தான் குரல் குடுக்க ஆட்கள் இருக்கின்றனரா? எங்களுக்கும் உள்ளனர், நாங்கள் அவ்வாறு எல்லாம் பேசவில்லை என தட்டிக் கழித்துள்ளனர்.