திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்க திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பாஜக நிர்வாகி செல்வகுமார் தவறான தகவல் பரப்பி இருந்தார்.
இதனை மறுத்த கோயில் நிர்வாகம், பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தத்திற்கான நெய், ஆவின் நிறுவனத்திடம் இருந்து மட்டுமே வாங்கப்படுவதாக தெரிவித்தது. இது தொடர்பாக வதந்தி பரப்பியதாக பழனி அடிவாரம் காவல்துறையில் பாஜக நிர்வாகிகள் செல்வகுமார் மற்றும் வினோஜ் பி செல்வம் மீது புகார் அளித்தது.
புகாரைப் பெற்ற காவல் துறையினர், கோவையைச் சார்ந்த பாஜக தொழிற்பிரிவு மாவட்ட துணைதலைவர் செல்வகுமார் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவது, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பியது என இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், இயக்குனர் மோகன் ஜி மீதும் தவறான தகவல் பரப்புவதாக கூறி பழனி கோவில் நிர்வாகம் சார்பில் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்