தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குஜராத்தில் மட்டுமே கிடைக்கும் சூதுபவள கல்மணி பதக்கம் வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த அதிசயம்! - Carnelian bull got in excavation - CARNELIAN BULL GOT IN EXCAVATION

Carnelian Bull got in Vembakottai Excavation: சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட அகழ்வாய்வில் சூதுபவள கல்மணியாலான காளை பொறிக்கப் பெற்ற பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெம்பக்கோட்டை அகழ்வாய்வு முகப்பு, கண்டெடுக்கப்பட்ட சூதுபவள கல்மணியாலான காளை பதக்கம்
வெம்பக்கோட்டை அகழ்வாய்வு முகப்பு, கண்டெடுக்கப்பட்ட சூதுபவள கல்மணியாலான காளை பதக்கம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2024, 7:22 PM IST

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அகழாய்வில், ‘கார்னீலியன்’ என்று அழைக்கப்படும் சூதுபவள கல்மணியில் குழிவாக செதுக்கப்பட்ட திமிலுள்ள காளை கண்டறியப்பட்டுள்ளது. இது மோதிரத்தில் பதிப்பிக்கும் வகையில் உள்ளது. கடந்த இரண்டு கட்ட அகழாய்வில் 15 சூதுபவள கல்மணிகள் கிடைத்துள்ளன.

இதில் செதுக்கப்பட்டுள்ள சீறும் திமிலுள்ள காளை உருவம் கிடைக்கப் பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும். இப்பதக்கம் 10.6 மில்லி மீட்டர் சுற்றளவும், 3.6 மில்லி மீட்டர் தடிமனும், 60 மில்லி கிராம் எடையும் கொண்டது. இதுவரையில் சுடுமண்ணால் ஆன திமில் உள்ள காளைகள் கிடைத்த நிலையில். தற்போது சூதுபவள கல்லில் திமிலுள்ள காளை உருவம் பொறிக்கப்பட்டது கிடைத்திருப்பது சிறப்பாகும்.

சூதுபவள மணிகள் செய்யக்கூடிய மூலக்கற்கள் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டுமே கிடைப்பவை. இதுபோன்று கல்மணிகளில் உருவங்கள் குழிவான முறையில் உருவாக்கப்படும் தொழில்நுட்பம் ரோம் நாட்டில் சிறப்புவாய்ந்தவை ஆகும். இதேபோல் கீழடி, சேரர் துறைமுக நகரமான முசிறி (பட்டணம்) அகழாய்வுகளில் சூதுபவள கல்மணியில் விலங்கின உருவம் பொறிக்கப்பெற்ற பதக்கங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

கீழடியில் காட்டுப்பன்றி உருவமும், முசிறியில் பாயும் சிங்கமும் கிடைக்கப் பெற்றுள்ளன. கீழடியிலும், முசிறியிலும் கிடைக்கப் பெற்ற சூதுபவள கல்மணியால் ஆன பதக்கங்கள் சங்க காலத்தைச் சார்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கவையாகும். அதேபோன்று, வெம்பக்கோட்டையிலும் கிடைத்திருப்பது சிறப்பாகும்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் ஆன உருளை வடிவ குழாய்கள் கண்டெடுப்பு!

ABOUT THE AUTHOR

...view details