தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விஜய் 69' அரசியல் படமா, பொழுதுபோக்கு படமா? - பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன புஸ்ஸி ஆனந்த்! - Bussy Anand - BUSSY ANAND

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி ஏற்றும் நிகழ்வில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் 69வது படத்தின் போஸ்டர் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துள்ளார்.

தளபதி 69 போஸ்டர் மற்றும் புஸ்ஸி ஆனந்த்
தளபதி 69 போஸ்டர் மற்றும் புஸ்ஸி ஆனந்த் (Credits - KVN Productions 'X' Page and ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2024, 9:47 AM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி ஏற்றும் நிகழ்வு பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தவெக மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, குட்டி கோபி வீட்டில் 30 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

த.வெ.க கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு (Credits - ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து, பெண்களுக்கு நல உதவியாக புடவைகள் வழங்கினார். மயிலாடுதுறை வள்ளாலகரம் ஊராட்சி சேந்தங்குடியில் கொடியேற்றிய புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், "தமிழக வெற்றி கழகத்தின் இலக்கு 2026. அப்போது நாம் கண்டிப்பாக ஆட்சியில் அமர்வோம். இதற்காக நாம் அனைவரும் ஜாதி, மதத்தை கடந்து மக்களோடு மக்களாக இணைந்து மக்கள் சேவை செய்ய வேண்டும்" என்று கூறினார்.

தொடர்ந்து மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் மேல வீதியில் 50அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றினார். கொடியேற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்துக்கு கட்சியினர் யானை சின்னம் பொருத்திய செங்கோலை பரிசாக வழங்கினர்.

இதையும் படிங்க:ஜனநாயக ஒளி ஏற்ற வருகிறார்.. தளபதி 69 அப்டேட் வெளியானது!

மேலும், கட்சி நிர்வாகி ஒருவரின் புதிய காரில் கட்சிக் கொடியை பொருத்தினார். இந்த நிகழ்வுகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்துக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவியும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை அணிவித்தும் வரவேற்பளித்தனர்.

இதற்கிடையே, நேற்று (செப்.14) வெளியிடப்பட்ட நடிகர் விஜய்யின் கடைசி படமான 69வது படத்தின் அறிமுக போஸ்டராக கையில் தீப்பந்தம் ஏந்தியபடி, 'ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர் விரைவில் வருவார்' (The Torch Bearer Of Democracy... Arriving Soon..) என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், கட்சி கொடியேற்று நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்திடம், விஜய்யின் 69வது படத்தின் போஸ்டர் குறித்து அரசியல் படமா? அல்லது எண்டர்டெயின்மெண்ட் படமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு, "தற்போது கட்சி கொடியேற்று விழாவிற்கு வந்துள்ளேன்" என்று மட்டும் தெரிவித்துவிட்டு, இக்கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல் புஸ்ஸி ஆனந்த் அங்கிருந்து சென்றார்.

ABOUT THE AUTHOR

...view details