தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்யும் விவகாரம்: வழக்கு விசாரணையை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம் - armstrong burial case - ARMSTRONG BURIAL CASE

ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய அவசர வழக்கின் விசாரணை தொடங்கியது. நீதிபதி பவானி சுப்பராயன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின்போது, ஆம்ஸ்ட்ராங் தரப்பிலும், அரசு தரப்பிலும் வலுவான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களுக்கு பிறகு வழக்கு விசாரணை மதியம் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங்  - கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் - கோப்புப்படம் (Image Credit -ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 9:48 AM IST

சென்னை:ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய அவசர வழக்கின் விசாரணை தொடங்கியது. நீதிபதி பவானி சுப்பராயன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின்போது, ஆம்ஸ்ட்ராங் தரப்பிலும், அரசு தரப்பிலும் வலுவான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அரசு மற்றும் ஆம்ஸ்ட்ராங் தரப்புக்கு இடையேயான வாதம், எதிர்வாதங்கள் மற்றும் நீதிபதி எழுப்பிய கேள்விகள் வருமாறு:

நீதிபதி பவானி சுப்பராயன் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்த நிலையில், இவ்வழக்கின் விசாரணை காலை 9 மணியளவில் துவங்கியது. அப்போது, 'கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லை. ஆனாலும், இதற்கு மாநகராட்சி அனுமதி மறுத்துள்ளது' என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு, '16 அடி சாலை பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. குடியிருப்புகள் அதிகமாக உள்ளது. அதனால் அனுமதி மறுக்கப்பட்டது. மூன்று இடங்கள் உடலை அடக்கம் செய்ய அரசு அனுமதி வழங்கியது. மூலக்கொத்தலம் பகுதியில் 2000 சதுர அடி இடம் உள்ளது. அங்கே என்ன வேண்டுமானாலும் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும். கட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் உரிய இட வசதி இல்லாததால் மட்டுமே அங்கு அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது' என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

'மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் உடல் அடக்கம் செய்ய மாநகராட்சி விதிகளின் படி அனுமதி இல்லை. மணிமண்டபம் அமைக்க குறைந்தது 1900சதுர அடி இடம் தேவை என்பதால், சாலை வசதி போதுமானதாக இல்லை. ஏற்கனவே கட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுமானங்களை இடித்துவிட்டு மணிமண்டபம் அமைத்தால், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்' என்றும் அரசு தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

'அனுமதி வழங்க நீதிமன்றம் தயாராக உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் முடிவு செய்ய வேண்டும். அரசின் முடிவில் தலையிட முடியாது. போதுமான இடம் இல்லாமல் அனுமதி வழங்க நீதிமன்றம் தயாராக இல்லை. போதுமான இடம் உள்ளவர்கள் தானமாக தர தயாராக இருந்தால் அனுமதி வழங்க தயாராக இருக்கிறேன். மேலும், பொதுமக்களும், கட்சி தலைவர்களும் வரும் இடம் என்பதால் கூடுதல் இடம் தேவை. இடம் இல்லாமல் அனுமதி கொடுத்தால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு கூட ஏற்படலாம். அரசு தரப்பில் இடம் இருந்தாலும் நீதிமன்றத்தில் உடனடியாக தெரிவிக்கலாம்' என்று நீதிபதி கூறினார்.

'சட்டத்தை மீறி அனுமதி வழங்க முடியாது என்று அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. சட்டத்திற்கு உட்பட்டு, பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத இடம் இருந்தால் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும்' என்று நீதிபதி தெரிவித்தார்.

'கட்சி அலுவலகத்தின் உள்ளே இருக்கும் கட்டிடத்தை இடித்து கூடுதல் இடம் ஏற்பாடு செய்யப்படும்' என்று மனுதாரர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

'மதியம் உடலை அடக்கம் செய்ய உள்ள நிலையில், எப்போது கட்டிடத்தை இடித்து வேலைகள் முடிக்க முடியும்' என நீதிபதி மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும்,'அரசு தரப்பில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் மாற்று இடம் இருந்தால் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தினார். மேலும் பெரம்பூரில் போதுமான இடம் இருந்தால் உடல் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும். தற்போது ஒரு இடத்தில் உடலை அடக்கம் செய்துவிட்டு, பின்னர் இடம் வாங்கிய பின் உடலை தோண்டி எடுத்து மணிமண்டபத்தில் அடக்கம் செய்யலாம்' என்றும் நீதிபதி ஆலோசனை கூறினார்.

'கட்சி அலுவலகம் 2700 சதுர அடி நிலமா? கட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதி குடியிருப்பு பகுதியா? மணிமண்டபம் அமைக்க எவ்வளவு இடம் தேவை?' என்று நீதிபதி கேள்விகள் எழுப்பினார்.

அத்துடன், 'ஏன் அரசு ஒதுக்கும் இடத்தில் உடலை அடக்கம் செய்யக் கூடாது? பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் உடலை அடக்கம் செய்யலாமே?' எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

இதனையடுத்து, மதியம் 12 மணிக்கு இடம் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதனை தொடர்ந்து வழக்கு விசாரணை மதியம் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, நீதிபதி பவானி சுப்பராயன் உயர்நீதிமன்றத்திற்கு வந்த நிலையில், வழக்கறிஞர்கள் வராததால், வழக்கு விசாரணை தொடங்குவதில் சற்றஉ தாமதம் ஏற்பட்டது.

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த 8 பேரையும் ஜூலை 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: 'ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைதானவர்களை போலீஸ் காவலில் எடுக்கத் திட்டம்' - போலீசார் தரப்பில் தகவல்-

ABOUT THE AUTHOR

...view details