திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்தவர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்பையா. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீரவநல்லூர் காவல் நிலையத்தில் இரவு பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்லும்போது நாய் குறுக்கே வந்ததால் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த சுப்பையா திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிகப்பபட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மூளைச்சாவு அடைந்தார். தொடர்ந்து சுப்பையாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.
பின்னர் சுப்பையாவின் உடலில் இருந்து கண்கள், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகள் எடுக்கப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. இதையடுத்து உடல் உறுப்புகளை தானம் செய்த உதவி ஆய்வாளர் சுப்பையா உடலுக்கு இன்று அரசு சார்பில் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.