திமுக ஊழல் அமைச்சர்கள் விரைவில் வேட்டையாடப்படுவார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தென்காசி கட்சி அலுவலகத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று (பிப்.23) திறந்து வைத்தார். தொடர்ந்து, பயணியர் விடுதி முன்பு 'என் மண் என் மக்கள்' யாத்திரையில் தொண்டர்களுடன் நடந்து சென்றார்.
இதில் பத்து அடி உயரமுள்ள ராட்சத மாலையை கிரேன் மூலம் பாஜகவினர் அண்ணாமலைக்கு அணிவித்தனர். யாத்திரை நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் சென்றனர்.
பின்னர் பொதுக்கூட்ட மேடையில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "இந்த பூமியானது சுதந்திரப் போராட்ட வீரர்களையும், கோயில்களையும் உள்ளடக்கிய ஆன்மீக பூமியாகும். பொங்கல் பரிசுக்கு தமிழக அரசு வழங்கிய வேஷ்டி, சேலையில் ஊழல் நடைபெற்று உள்ளது. ஆகையால், திமுக ஊழல் அமைச்சர்கள் விரைவில் வேட்டையாடப்படுவார்கள்.
2021 தேர்தல் வாக்குறுதியாக 511 வாக்குறுதிகளை திமுக அரசு கொடுத்தது. இரண்டரை ஆண்டுகள் ஆகியும், அதில் 20 வாக்குறுதிகளைக் கூட முழுவதுமாக திமுக நிறைவேற்றவில்லை. ஆனால், பாஜக 295 தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தது. அதில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
ஆனால், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், நிறைவேற்றி விட்டதாக பொய் பேசி வருகிறார். தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாவட்டத்திற்கு இரண்டு நவோதய பள்ளிகள் காமராஜர் பெயரில் திறக்கப்படும். செண்பகவள்ளி அணைக்கட்டு உடைப்பு உடனடியாக சரி செய்யப்படும்.
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, ரவுடி ராஜா போல் செயல்பட்டு வருகிறார். அவர் மக்கள் மீது அக்கறை கொள்ளாமல், சொத்து சேர்ப்பதில் அக்கறை காட்டி வருகிறார். அவர் வாங்கிய சொத்துக்களின் பட்டியல்கள் நீண்டு கொண்டே போகின்றது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி பெறும்.. நாடாளுமன்றத் தேர்தல் வியூகத்தை பிரத்யேகமாக அளித்த சிவராஜ் சிங் சவுகான்!