சென்னை:பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி அக்டோபர் 2ஆம் தேதி வரை பாஜக சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் பாஜக மருத்துவ அணி மாநில தலைவர் பிரேம் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமை பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ ஆலோசனைக் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் கைதான அனைவரையும் என்கவுண்டர் செய்துவிட்டால் வழக்கு சரியாகிவிடும் என நினைக்கிறேன். அதற்குமேல் சொல்வதற்கு எதுவுமில்லை. திமுக - காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொலை செய்யப்பட்டனர்.
பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் ஒரு மீனவர் கூட கொலை செய்யப்படவில்லை. கிரிக்கெட்டில் இலங்கையை இந்தியா வீழ்த்திய நாளன்று இலங்கை கடற்படை மீனவர் ஒருவரை கொலை செய்தது. அதனைத் தவிர்த்து ஒருவர் கூட கொலை செய்யப்படவில்லை. இலங்கை - இந்திய இடையிலான மீனவர்கள் பிரச்சினையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்திய கடற்படையும் இலங்கை மீனவர்களை கைது செய்து வருகிறது. கடந்த வாரம் வரை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை செய்யபட்டுள்ளனர். மேலும் இலங்கை மக்கள் அவர்களுக்கு தேவையான அரசை வாக்களித்து தேர்வு செய்துள்ளனர். இலங்கை அரசோடு, தமிழக மக்கள் நலனுக்காக எப்போதும் மத்திய அரசு தொடர்பில் இருக்கும், உறுதுணையாக இருக்கும்" என தெரிவித்தார்.
இதையடுத்து தி நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா மற்றும் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.