விழுப்புரம்: 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையை தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விழுப்புரம் காந்தி சிலையிலிருந்து தொடங்கினார். திரு.வி.க வீதி, காமராஜர் வீதி வழியாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொண்டர்கள் மத்தியில் அண்ணாமலை உரையாற்றினார்.
அப்போது பேசுகையில், “கடந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி அன்று தொடங்கி இன்று 104வது தொகுதியில் உரையாற்றுகிறேன். தமிழக அரசியலில் முழுமையான மாற்றம் வேண்டும். இங்கு மக்களுக்கு ஒரு அரசியலும், ஆளுகின்றவர்களுக்கு ஒரு அரசியலும் இருக்கிறது. தமிழகத்தில் தரமற்ற பள்ளிகள் உள்ளது. தமிழக அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. விழுப்புரத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தார்கள்.
அதில் ஒரு அமைச்சர் சாராய வியாபாரிகளுடன் கைகோர்த்து இயங்கியது எல்லோருக்கும் தெரியும். மற்றொரு அமைச்சர் தற்போது தண்டனை பெற்றுள்ளார். மக்கள் வரிப்பணத்தில் இலாக்கா இல்லாத அமைச்சர்களை வைத்துள்ளது திமுக அரசு.
கல்வி, சுகாதாரம் போன்றவை மிக மோசமான நிலையில் உள்ளன. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் பார்க்கின்ற போது மனித வளர்ச்சியில் கடைசி நான்காவது இடத்தில் உள்ளது விழுப்புரம் மாவட்டம். திருமாவளவன் போன்றவர்கள் முட்டாள் தனமான தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்கள்.
'ஒரே நாடு ஒரே தேர்தல் எப்போதும் கொண்டு வரக்கூடாது என்கிற தீர்மானத்தை விடுதலை சிறுத்தை கட்சி மாநாட்டில் இயற்றுகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சரை மேடையில் அமர வைத்து தீர்மானத்தை நிறைவேற்றுகிறார். நெஞ்சுக்கு நீதியில் முதலமைச்சரின் அப்பா கருணாநிதி ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என்று எழுதியிருக்கிறார். அதற்கு மாறாக, திருமாவளவன் தீர்மானம் நிறைவேற்றுகிறார்.