தஞ்சாவூர்: கும்பகோணம் துக்கம்பாளையம் தெருவில் வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு பாலிஷ் போடுவதாகக் கூறி, வீட்டில் உள்ள பெண்களிடம் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைப் பெற்று, அதனை பாலிஷ் போடும்போது, அதனைக் கரைத்து ஏமாற்றி மோசடியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சிவசெந்தில்குமார் தலைமையிலான போலீசார், சந்தேகத்திற்கு இடமாக அப்பகுதியில் சுற்றி வந்த மூன்று வட மாநில இளைஞர்களைப் பிடித்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில், அவர்கள் பீகார் மாநிலத்திலிருந்து வந்துள்ளதாகவும், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு பாலிஷ் போடும்போது அதை கரைத்து மோசடி செய்து எடுத்துச் செல்வதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், இவர்கள் ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியிலும், திருச்சி உப்பிலியாபுரம் மற்றும் மணப்பாறை பகுதியிலும் இதுபோன்று பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்தது தெரியவந்தது.