மதுரை: மதுரையைச் சேர்ந்த கோகுல் அபிமன்யு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கீழமை நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளின் போது சாட்சி அளிப்பவரின் சாதி மற்றும் மதம் குறிப்பிடப்படுகிறது.
இதனை கீழமை நீதிமன்றம் ஒரு நடைமுறையாகவே கொண்டுள்ளது. இதனால் நீதிபதியும், வழக்கறிஞர்களும் சம்பந்தப்பட்ட நபரின் சாதி மற்றும் மதம் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக அமைகிறது. சாட்சி அளிக்கும் நபரின் சாதி மற்றும் மத அடையாளங்கள் இன்றியே அந்த வழக்கை கையாளலாம். சாதிக்கும், மதத்திற்கும் அதில் எவ்விதமான பங்கும் இல்லை.
இதையும் படிங்க :கிண்டி ரேஸ் கிளப் வழக்கு;தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு! - Guindy Race Club Case
உச்ச நீதிமன்றமும் சாதி மற்றும் மத அடையாளத்தை சேகரிக்க தேவையில்லை என குறிப்பிட்டும், இந்த நடைமுறை தொடர்கிறது. ஆகவே, கீழமை நீதிமன்றங்கள் வாக்குமூலம் பெறும்போது, அவர்களின் சாதி மற்றும் மதத்தை குறிப்பிட தேவையில்லை என உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதி மற்றும் நிர்வாகப் பதிவாளர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவ 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.