சென்னை:கிருஷ்ணகிரியில் குழந்தையைக் கடத்த முயன்றதாக பரவிய போலி வீடியோவை நம்பி, அசாமைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 5 பேரை பொதுமக்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போலியான வீடியோவை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு குழந்தைகளைக் கடத்த வடமாநிலத்திலிருந்து சுமார் 400 பேர் சேலத்திற்கு வந்துள்ளதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, வட மாநிலத் தொழிலாளர்கள் மீது ஒருவிதமான பயம் ஏற்பட்டது. சில மாவட்டங்களில் தொழிலாளர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது.
குழந்தை கடத்தப்பட்டதாக வெளியாகும் போலி வீடியோவால், தொழில் நிமித்தமாக தமிழகம் வந்த வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கே திரும்பிச் சென்ற சம்பவங்களும் நடந்தது. மனித உரிமை ஆணையமும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு: பொதுவாக குழந்தைகள் கடத்தப்பட்டால் உடனடியாக "குழந்தை காணவில்லை" என காவல்துறை வழக்குப்பதிவு செய்யும், விசாரணைக்குப் பின் "குழந்தை கடத்தல்" வழக்காக மாற்றம் செய்யப்படும். நீதிமன்ற உத்தரவின்படி, 2019ஆம் ஆண்டு தமிழக அரசு, குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவை ஏற்படுத்தியது.