தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் நில ஆக்கிரமிப்பு விவகாரம் - தனியார் தொலைகாட்சி செய்தியாளர் மீது தாக்குதல்! என்ன நடந்தது? - Mayiladuthurai government hospital

Reporter Attack : மயிலாடுதுறை அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறையில் செய்தியாளர் மீது தாக்குதல்
மயிலாடுதுறையில் செய்தியாளர் மீது தாக்குதல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 6:05 PM IST

மயிலாடுதுறையில் செய்தியாளர் மீது தாக்குதல்

மயிலாடுதுறை: கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள பிரச்சினை தொடர்பாக, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், லேசான காயங்களுடன் செய்தியாளர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இதுகுறித்து பாலையூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தள்ளார்.

மயிலாடுதுறை, குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வைகல் கிராமத்தில் செல்லியம்மன் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பிடாரி அம்மன் ஆலயம் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில், கோயிலின் முன்னாள் பூசாரி கோவிந்தசாமி மற்றும் தற்போதைய பூசாரி கணேசன் ஆகிய இருவரும் பட்டா பெற்று வீடுகட்டி வசித்து வரும் நிலையில், முன்னாள் பூசாரி கோவிந்தசாமி கோயில் இடத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோயில் கும்பாபிஷேகம் செய்வதற்கு திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கோயிலுக்கு சுற்றுசுவர், மற்றும் யாகசாலை அமைப்பதற்காக, கோயில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சுற்றுசுவர் அமைத்துள்ள கோவிந்தசாமியிடம் நிலத்தை அகற்றி தருமாறு கிராம மக்கள் கேட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பாக ஊர் பொதுமக்கள், கடந்த ஜனவரி 8ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்பு கூட்டத்தில் மனு அளித்துள்ளனர். மனுவின் அடிப்படையில், நேற்று (ஜன. 27) வருவாய்துறையினர், பிடாரி அம்மன் கோயிலில் ஆய்வு செய்து, சுற்றுசுவரை அகற்றி கோயில் நிலத்தை தருமாறு கோவிந்தசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த கோவிந்தசாமி அதே கிராமத்தில் வசிக்கும், தனியார் தொலைகாட்சி செய்தியாளர் விக்னேஷ் (வயது 25) என்பவரின் தூண்டுதலின் பேரில் கிராம மக்கள் புகார் தெரிவித்ததாக கருதி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், லேசான காயங்களுடன் விக்னேஷ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனியார் செய்தியாளர் விக்னேஷ் கூறுகையில், "கோயில் நிலத்தை அக்கிரமிப்பு செய்து கோவிந்தசாமி என்பவர் வீடு கட்டியுள்ளார். கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்காக நிலைத்தை அகற்ற கோரி ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இதனால் குத்தாலம் தாசில்தார் நேற்று அப்பகுதியில் ஆய்வு செய்து, கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோவிந்தசாமியிடம் கூறியுள்ளார். இதற்கு மூல காரணம் நான் என்று நினைத்து அவர்களது உறவினர்களான 3 சிறுவர்கள் கத்தி மற்றும் பிளேடு கொண்டு கை மற்றும் வயிற்றில் தாக்கினர்.

இதனால் நான் பாலையூர் காவல் நிலைத்தில் தஞ்சம் புகுந்தேன். அங்கிருந்து போலீசார் தன்னை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்" இவ்வாறு அவர் கூறினார். லேசான காயம் என்பதால் முதலுதவி சிகிச்சை பெற்று விக்னேஷ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, கோவிந்தசாமி மற்றும் அவர்களது உறவினர்களான 3 சிறுவர்களின் மீது பாலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொடுரமாக வெட்டப்பட்ட நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்திலும் செய்தியாளர் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சென்னை ஏர்போர்ட்டில் ஹரியானாவை சேர்ந்த சிஐஎஸ்எஃப் வீரர் உயிரிழப்பு.. காரணம் என்ன..?

ABOUT THE AUTHOR

...view details