சென்னை:தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளான பி.இ, பி.டெக், பி.ஆர்க் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வினை, தொழில்நுட்பக் கல்வி இயக்கம் நடத்தி வருகிறது. அதன்படி, 2024-2025ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வினை நடத்துவதற்கு, தொழில்நுட்பக் கல்வி ஆணையர் தலைவராகவும், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் துணைத் தலைவராகவும், மாணவர் சேர்க்கைக் குழுவின் செயலாளராக கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியர் புருஷோத்தமன் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து, உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திக் அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையின் முதல் குழுவின் கூட்டம், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. அதில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ், பதிவாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1ஆம் தேதி துவங்கி 22ஆம் தேதி முடிவடைந்த நிலையில், முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுத் துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாக உள்ளது. அதன்பின்னர், பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் மூலமான விண்ணப்பப்பதிவு துவங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
எதில் திறனுள்ளது என ஆராய வேண்டும்:இந்த நிலையில், பொறியியல் படிப்பினை மாணவர்கள் தேர்வு செய்வதற்கு முன்னர் கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “12ஆம் வகுப்பு வரையில் படித்துள்ள மாணவர்கள், அவர்களின் பன்முகத்திறன்கள் எந்தத் துறையில் இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும். அவர்களுக்கு அறிவு அல்லது திறன் ஆகியவற்றில் எதில் வலுவான திறனுடன் இருக்கின்றனர் என்பதை முதலில் ஆய்வு செய்து தெரிந்து கொள்ள வேண்டும்.
மாணவர்கள் தங்களால் முடியாத பாடப்பிரிவை இனிமேல் படித்து விடலாம் என நினைத்தால் பின்னர் கஷ்டப்படுவர். கணிதப் பாடத்தில் 80 மதிப்பெண் பெற முடியாத மாணவர்கள் படித்தால் கஷ்டப்படுவர். அவர்கள் பொறியியல் படிப்பில் சிறந்து விளங்க முடியாது. அவர்கள் திறன் சார்ந்த தொழிலுக்குத் தான் செல்வார்கள். அதற்கு மாற்றாக 12ஆம் வகுப்பு முடித்த உடன் ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்பில் சேர்ந்து திறனை வளர்த்திருந்தால், பின்னர் அவர்களுக்கான வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
தகுதியான ஆசிரியர்கள் உள்ளாரா என தெரிந்து கொள்ள வேண்டும்:வரும் கல்வியாண்டில் நிறைய கல்லூரிகளில் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (Artificial Intelligence), டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவுகளில் இடங்களை அதிகரித்து விட்டு, மற்ற பிரிவுகளில் இடங்களைக் குறைத்து உள்ளனர். ஆனால், ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவில் போதுமான அளவில் ஆசிரியர்கள் இல்லாமல் உள்ளனர். எனவே, மாணவர்கள் சேரும் கல்லூரியில் தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறாரா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.
தகுதியான ஆசிரியர்கள் இல்லாவிட்டால், உங்களின் 4 ஆண்டு படிப்பு வீணாகிவிடும். கல்லூரியில் கட்டிடங்கள் அழகாக இருக்கிறது என்பதற்காக சேர்ந்துவிடக்கூடாது. ஆசிரியர்கள் தான் முக்கியமானவர்கள். தகுதியான ஆசிரியர்கள் நல்ல சம்பளத்தில் இருந்தால் தான் சிறப்பான கல்விக் கிடைக்கும். எனவே, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களிடம் பேசினால் ஆலோசனை கிடைக்கும்.
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது:பொறியியல் படிப்பினை படிக்க மாணவர்கள் அந்தக் கல்லூரியில் படிக்கும் மூத்த மாணவர்களிடம், ஆசிரியர்கள் எவ்வாறு பாடம் நடத்துகின்றனர் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளலாம். சரியான ஆசிரியர்கள் இல்லாத கல்லூரியில் படிப்பதை விட, டிப்ளமோ, ஐடிஐ படிப்பது நல்லது. தமிழ்நாடு அரசு ஐடிஐ படிப்பை வேலை கிடைக்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளனர்.