தஞ்சாவூர்: ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் நாள் சர்வதேச இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இளையோர் எழுச்சி தினத்தை முன்னிட்டு அதனை கொண்டாடும் வகையில் இன்று (ஆக.11) கும்பகோணத்தில் 1500க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஆர்வமாக பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
சர்வதேச இளைஞர் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கும்பகோணம் தாராசுரம் பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் ஏராளமானோர் இளைஞர் எழுச்சி நாள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, அங்கிருந்து புறப்பட்ட 1500க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பங்கேற்ற இந்த 8 கி.மீ நீள மாரத்தான் ஓட்டத்தினை, கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் கல்லூரி செயலாளர் அமலோர்பவ மேரி, கல்லூரி முதல்வர் யூஜின் அமலா தஞ்சை மாவட்ட ஊராட்சி துணை தலைவர் முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலையில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கும்பகோணம் தாராசுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தாராசுரம் காய்கறி சந்தை, தாலுக்கா காவல் நிலையம், மொட்டை கோபுரம், உச்சிப்பிள்ளையார் கோயில், ஆயிக்குளம் சாலை, ஹாஜியார் தெரு, நால்ரோடு, ரயில் நிலைய சாலை, மேம்பாலம் வழியாக 8 கி.மீ தூரத்தைக் கடந்து இதயா மகளிர் கல்லூரி வளாகத்தை சென்றடைந்து நிறைவு பெற்றது.