சென்னை: பட்டினம்பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது, "இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள் கூறிய அவர் மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து அதிர்ச்சி தரக்கூடியதாகவும் வேதனையாகவும் இருப்பதாக தெரிவித்தார். மேலும், தொடர் ரயில் விபத்துகளால் ரயிலில் பொதுமக்கள் பயணம் செய்ய அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் மத்திய அரசு மற்றும் ரயில்வே துறை விழிப்புணர்வுடன் இருந்து விபத்துகளை தடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
டி.ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு (Credit -ETVBharat TamilNadu) அதனை தொடர்ந்து பேசிய அவர், அரசியல் வரலாற்றில் திமுக பலமுறை தோல்வி அடைந்த வரலாறு உண்டு என்றும் ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட் இழந்தனர் எனவும் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் திமுக ஏன் போட்டியிடவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
பின், தமிழகத்தில் நடைபெற இருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமைச்சர்கள் அனைவரும் முகாமிடுவார்கள் அதனால் அங்கு அதிகார துஷ்பிரயோகம் நடைபெறும் எனவும் தெரிவித்தார். மேலும், இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது பண விரயம் மட்டும் இன்றி கால விரயமும் கூட என கூறினார். அதிமுக தலைமை மட்டும் அல்ல அதிமுகவிற்கு வாக்களிக்கும் தொண்டர்களும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பார்கள் என தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக 6% வாக்குகள் கடந்த தேர்தலை விட குறைவாக பெற்றுள்ளது. 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். சசிகலாவிற்கும் அதிமுகவிற்கு சம்மந்தம் இல்லை. அதேபோல் ஓ.பி.எஸ் கனவு பலிக்காது அவர் திமுகவை புகழ்ந்தவர் என கூறினார். மேலும், சாதி, மதம், இனம் ,மொழி கடந்து அதிமுக அனைத்து சமுகத்திற்கு பிரதிநிதித்துவம் கொடுத்து அனைவரும் சமம் என்ற சமத்துவ அடிப்படையில் அதிமுக செல்வதாகவும் எனவே சசிகலாவின் ஜாதி என்ற மலிவான பிரசாரத்தை கையில் எடுத்துள்ளது மக்களிடம் எடுபடாது எனவும் மக்கள் மற்றும் தொண்டர்களால் ஏற்கப்படாத சசிகலா ரீ என்ட்ரி ஆக வாய்ப்பு இல்லை என தெரிவித்தார்.
அண்ணாமலையை மாற்றி பின்லேடனே வந்தாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை. அண்ணாமலையின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றால் பாஜக தனித்து நிற்க வேண்டும். அதை தவிர்த்து பத்து பேர் உடனான கூட்டணியை சேர்த்து 10% வாக்கு வங்கியை பெற்று விட்டோம் என்று கூறினால் அது சரியல்ல. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமே கிடையாது அதனால் தனித்து போட்டியிட்டு தமிழகத்தில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவினர் ஓட்டு போட்டால் ஈபிஎஸ்-ஐ வேண்டாம் என அர்த்தம் - ஆர்.எஸ்.பாரதி அதிரடி! - VIKRAVANDI BYE ELECTION