சென்னை:காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வாக்குப்பதிவு நடைபெறவுள்ள தொகுதிகளில் பொது இடங்களுக்குச் சென்று சாமானிய மக்களுடன் கலந்துரையாடுவது, அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வது என்று, தம்மை எளிய மக்களின் பிரதிநிதியாக அடையாளப்படுத்தி கொள்ள முயற்சித்து வருகிறார்.
அண்மையில் கூட, ஐந்தாம் கட்ட தேர்தலையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது, ஒரு சலூன் கடைக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கு முகச்சவரம் (ஷேவிங்) செய்து கொண்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலானது. அதேபோன்று தற்போது உணவகம் ஒன்றுக்கு சென்றுள்ள அவர், அங்கு உணவருந்தியபடி ஹோட்டல் நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவதுடன் அங்குள்ள வாடிக்கையாளர்களுடன் செல்ஃபியும் எடுத்து கொண்டுள்ளார்.
இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது தான் தமிழக மற்றும் தேசிய அரசியலில் தற்போது பேசுபொருளாகி உள்ளது. 'நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் !!!' என்று தமது பதிவில் குறிப்பிட்டு, ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜு புகழாரம் சூட்டியுள்ளதும் அரசியல் அரங்கில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.