மதுரை:தென் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி பெறுவதற்கு குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி பெறும் வகையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்திட அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில், 2013-2014-ல் மதுரை - தூத்துக்குடி தொழில் வழித்தடத்தை அரசாணை வெளியிட்டு Economic Corridor என அறிவித்தார். மதுரை - தூத்துக்குடி 160 கிலோமீட்டர் இடையே உள்ள பகுதியில் 10 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில், இந்தியாவிலேயே மிகப்பெரிய திட்டம் அமைந்திருக்கும். கோடிக்கணக்கில் வெளிநாட்டு முதலீடுகளை நாம் ஈர்த்திருக்கலாம். உள்நாட்டிலும் அதிக சிறு, குறு, நடுத்தர தொழில் யூனிட்டுகள் உருவாகி லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் இளைஞர்களுக்கு கிடைத்திருக்கும்.
இத்திட்டத்தினால் ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ், உணவு பதப்படுத்துதல், ரசாயனம், மருந்துப் பொருட்கள் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் வளர்ச்சி ஏற்படுவதற்கு பொருளாதார வளர்ச்சி அதிகரித்திருக்கும் என்று மக்களால் பேசப்பட்டு வருகிறது. எனவே, ஜெயலலிதா அறிவித்தபடி மதுரை, தூத்துக்குடி தொழில் வழிச்சாலையை தாமதமின்றி உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் வருடத்திற்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள் என 5 வருடங்களுக்கு 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை தருவோம் என்றார். ஆனால், இன்றைக்கு எத்தனை ஆயிரம் பேருக்கு தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையத்தின் மூலமும், தேர்வு முகமைகளால் நடத்தப்படுகிற தேர்வு செய்யப்பட்டு நியமித்த அந்த வேலை வாய்ப்புகள் என்பது யானைப் பசிக்கு சோளப்பொரி போல உள்ளது.