சேலம்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்த நாள் விழா இன்று சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பின்னர், திமுக ஆட்சி 3 ஆண்டுகள் முடிந்து 4ஆம் ஆண்டை தொடங்கியுள்ளது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “4ஆம் ஆண்டு சாதனையாக தமிழக அரசு தான் கருதுகிறது, தமிழ்நாட்டு மக்கள் கருதவில்லை.
3 ஆண்டு கால திமுக ஆட்சி என்பது 30 ஆண்டுகால சோதனை. மின்கட்டணம் உயர்வு, போதைப் பொருள் நடமட்டம், தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முதல்முறையாக தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது என்பதே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்பதற்கான உதாரணம்.
வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி என அனைத்து வரி உயர்வு, குழந்தைகள் குடிக்கும் பால் உள்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி மக்களை இந்த அரசு வஞ்சித்துள்ளது. 3 ஆண்டுகளில் தமிழ்நாடு பார்க்காத வேதனையைச் சந்தித்துள்ளது.