சென்னை:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக தரப்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், வைகைச் செல்வன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தினுடைய நலனை முன்னிலைப் படுத்தவும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்குவதுமான ஒரு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழக முழுவதும் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை மண்டல வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அதிமுகவினுடைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தில் பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து தரவுகளைச் சேகரித்துச் சிறந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கச் செய்ய உள்ளதாகவும் அதன்படி பிப்ரவரி 5ஆம் தேதி காலை 9 மணி சென்னை மண்டலத்திலும் மாலை 5 மணிக்கு வேலூர் மண்டலத்திலும் 6ஆம் தேதி காலை 10:30 மணிக்கு விழுப்புரம் மண்டலத்திலும் மாலை 5 மணிக்குச் சேலம் மண்டலத்திலும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.