தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் உரிய ஆவணமின்றி ரூ.42.26 லட்சம் ஒரே நாளில் சிக்கியது! - lok sabha election 2024

Flying Squad seized election money: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் முறையான ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.42.26 லட்சத்தை ஒரே நாளில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

2024 Lok Sabha election lakhs of undocumented cash seized
2024 Lok Sabha election lakhs of undocumented cash seized

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 7:18 AM IST

கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் நாடெங்கும் அமலுக்கு வந்த நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உரிய ஆவணங்கள் ஏதுமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.42.26 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதியில் 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு மற்றும் 2 வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தேர்தலுக்கான விதிமுறைகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த தேர்தல் விதிமுறை மீறல்களை கண்காணிக்கும் பணியில் இக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலையொட்டி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதியில் 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு மற்றும் 2 வீடியோ கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராமபட்டிணம் அருகே உரிய ஆவணங்கள் எதுவுமின்றி சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரின் வாகனத்தில் எடுத்து வந்த ரூ.3 லட்சத்து 37 ஆயிரத்து 400-யை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அதேபோல, கோபாலபுரத்தில் நிலையான கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், மதுரைச் சேர்ந்த செந்தில்குமாரிடம் முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், பாலக்காடு சாலை நல்லூர் கைகாட்டி அருகே வாகனத்தில் வந்த பெரிய நெகமத்தைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவரிடம் ரூ.1 லட்சத்து 64 ஆயிரமும், கோபாலபுரம் அருகே கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஃபைசல் என்பவரிடம் ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்து 500 கைப்பற்றப்பட்டது.

இதேபோல, கோபாலபுரம் சோதனை சாவடியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, கேரளாவில் இருந்து வந்த சரக்கு வாகனத்தில் முறையான ஆவணங்கள் இன்றி அப்சல் என்பவர் கொண்டுவந்த ரூ.2.72 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

கேரளாவில் இருந்து கோபாலபுரம் வழியாக திருச்சிக்கு செல்ல முயன்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, கிடைத்த உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.30 லட்சத்தையும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அசோக்குமார் என்பவரிடம் நடத்திய விசாரணையில், திருச்சியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் கேரளாவில் எலுமிச்சம் பழம் வியாபாரம் செய்து வருவதாகவும், அங்கு எலுமிச்சம் பழம் பெற்ற பணத்தை வசூல் செய்து திருச்சிக்கு எடுத்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை 6 நபரிடமிருந்து முறையான ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.42 லட்சத்து 20 ஆயிரத்து 900-ஐ பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில், ரூ.10 லட்சத்துக்கு மேல் பறிமுதல் செய்யப்படும் பணம் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வருமானவரித்துறையிடம் ஒப்படைக்கப்படும் என பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கேத்திரின் சரண்யா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தேர்தல் பத்திரம்: ரூ.650 கோடி நன்கொடை பெற்றதா திமுக? யார் கிட்ட இருந்து தெரியுமா? தேர்தல் ஆணையம் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details