மதுரை:குழந்தைகளை போதைக்கு அடிமையாக்கும் வகையில் கூலிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் புதிய வடிவில் வெளிவருகின்றன. இதனைத் தடுக்க உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேலும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் காளத்திமடம் பகுதியை சேர்ந்த ஆனஸ்ட் ராஜா என்பவர் தடை செய்யப்பட்ட கூலிப் புகையிலை போதைப்பொருளை பெங்களூருவிலிருந்து கடத்தி வந்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆனஸ்ட் ராஜா தமக்கு ஜாமீன் வழங்கும்படி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி பரதசக்கரவர்த்தி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஜாமீன் மனு வழங்க முடியாது என உத்தரவிட்ட நீதிபதி பரதசக்ரவர்த்தி தமது உத்தரவில் மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மாணவர்களுக்கு பல் மருத்துவ பரிசோதனை:நீதிபதி பரதசக்கரவர்த்தி அளித்த உத்தரவில், "கூல்லிப்பை பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள் வகுப்பில் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். இது குறித்த தொடர் சம்பவங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்திருக்கிறது. கூலிப் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் தயாரித்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவ்விவகாரத்தை விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது.
பள்ளிகளுக்கு அருகில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தல் அல்லது குழந்தைகளுக்கு விற்க முயன்றால் தொடர்புள்ள நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். உற்பத்தியாளர், விநியோகஸ்தர், விற்பனையாளர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனமாக இருந்தால் தொடர்புள்ள பணியாளர், நிறுவன இயக்கநர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும். சட்டப்பூர்வ எச்சரிக்கை படம், வாசகம், தயாரிப்பின் மீது இடம் பெறவில்லை எனில் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகையிலை அல்லது நிகோடின் கறைகளை கண்டறிய அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிலும் குறைந்தபட்சம் 2 முறை பல் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
மாவட்ட, பள்ளி அளவில் குழுக்கள்:ஒவ்வொரு மாவட்டத்திலும் புகையிலை உபயோகிப்பதை தடுப்பதற்கு குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மையம் நிறுவ வேண்டும். அந்த மையத்தில் ஒரு நிபுணர், மருத்துவ சமூக பணியாளர் அல்லது குழந்தை உளவியலாளர் ஆகியோரை நியமிக்க வேண்டும். இந்த மையங்களில் போதைக்கு அடிமையான குழந்தைகளுக்கு ஆலோசனை, சிகிச்சை அளிக்க வேண்டும். குழந்தைகளின் மனஉறுதியை பாதிக்காத வகையில் அவர்களின் பைகளை கவனமாக பரிசோதிக்கும் வகையில் சுற்றறிக்கையை வெளியிட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்யலாம்.
இதையும் படிங்க:"லேப்டாப் திருட்டு வழக்கில் தலைமை ஆசிரியர்களை பலிகடா ஆக்குவது நியாயமற்றது" - உயர் நீதிமன்றம் அதிருப்தி!
ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு தன்னார்வ தொண்டர் அல்லது பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த ஒருவர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் இந்த குழு புகையிலை பொருட்களை பயன்படுத்தியதற்கான அல்லது விற்பனை செய்ததற்கான ஆதாரம் ஏதேனும் இருந்தால் அருகாமையில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.