பாஜக ஆதரவு பிரச்சாரத்தில் நடிகை கஸ்தூரி பேட்டி கோயம்புத்தூர்: கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் இரவு வரை இந்து மக்கள் கட்சி சார்பில் "மீண்டும் மோடி வேண்டும் மோடி" என்ற தலைப்பில் 2024 நாடாளுமன்ற பிரச்சார துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, "தமிழ்நாட்டின் அரசியல் சூழல் என்பது நேற்று, இன்று என மாறவில்லை. அது ஒரே சீராகக் குழப்ப நிலையில் தானே உள்ளது. திமுக கூட்டணியில் கூட சீட்டுப் பகிர்மானம் துவங்கிவிட்டது. மற்றவர்கள் எல்லாம் காத்திருப்பு நிலையில் உள்ளன. இந்த வாரத்திற்குள் எல்லாவற்றையும் முடிவு செய்து அறிவித்து ஆகவேண்டும். ஏனென்றால், அதற்குப் பிறகு தேர்தல் தேதி அறிவித்துவிடுவார் என்றார்.
தொடர்ந்து பேசிய கஸ்தூரி, திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியமான காரணம், திமுகவை எதிர்த்து எதிர்க்கட்சி என இல்லை. திமுகவுக்கு எதிரான வாக்குகள் பிரிகிறது. ஆகையால் சரியான எதிர்கட்சியாக யார் அங்கு வரப்போகிறார்கள் என்பதை முடிவு செய்யும் தேர்தலாகத் தான் இது தமிழ்நாட்டில் இருக்கப்போகிறது. திமுகவைத் தோற்கடிக்கும் தேர்தலாக இருக்காது. திமுகவுக்கு அடுத்து யார் என்ற கேள்விக்குப் பதிலாக இருக்கும்.
அதிமுக தனியாக போட்டியிடுவது என்பது மாறாத முடிவு. ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். அதிமுக என்பது ஜெயலலிதா காலத்தில், மோடியா லேடியா எனத் தனியாக நின்று வெற்றி பெற்றவர். ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. புள்ளிவிவரத்தின் அடிப்படை கூறுகிறேன், ஆளுங்கட்சிக்கு எதிரான ஒரு அதிருப்தியை காட்ட வேண்டும் என்றால் பாஜக அதிமுக இணைந்து அறுவடை செய்தால் தான் நன்றாக இருக்கும் எனக் கூறினார்.
கமல் 10 சதவீதம் ஓட்டை தனியாகப் பிரித்தார். ஆனால் தற்போது அவரும் திமுக கூட்டணியில் உள்ளார். ஆகையால் அந்த ஓட்டும் திமுகவுக்குத்தான் போகும். பீகாரில் தற்போது தொகுதிப் பங்கீடு சரியாக நடக்கவில்லை என்றால், அது எந்த வகையில் நமக்கு ஒத்துப்போகும். நாம் முதலில் நம்ம ஊரு பஞ்சாயத்தை முதலில் முடிப்போம்.
நடிகர்கள் குறித்து அண்ணாமலை கூறிய கருத்திலிருந்து நான் வேறுபடுகிறேன். நடிகர் நடிகை என்பது கிடையாது. பொறுப்புள்ள குடிமகன், குடிமகளாக இருக்கக்கூடிய யாராக இருந்தாலும், செய்திகளை விழிப்புணர்வுடன் அணுக வேண்டும். எல்லாவற்றுக்கும் கருத்து சொல்ல வேண்டும் என்பது யாருக்குமே தேவை இல்லை. எல்லாரும் அரசியல் தெரிந்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து. சமூகத்தின் மீது அக்கறையுள்ள யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம்.
நான் விஜயின் தீவிர ரசிகை. அது அனைவருக்கும் தெரியும். தற்போது நடிகர் துவங்கும் கட்சி குறித்த கேள்வி வேண்டாம். அரசியல் - நடிகர்கள் குறித்துப் பேசும் நிலைமையில் நாம் இல்லை, வரலாறு அப்படி உள்ளது. விஜய்க்கு வாழ்த்துக்கள். நம்பிக்கையை மட்டும் தெரிவிக்கிறேன் தற்போது கருத்து வேண்டாம். பாஜக 400 என்பது சாத்தியம் தான்.
திமுகவுக்குதான் வெற்றி வாய்ப்பு என்பது நான் கூறவில்லை, எல்லாக் கருத்துக் கணிப்பும் அதைத் தான் கூறுகிறது. நம்பிக்கை வேறு நிதர்சனம் வேறு, எதிர்க்கட்சிகள் பிளவுபட்டுக் கிடக்கும் போது, எந்த ஒரு தவறான முன்னெடுப்பையும் எடுத்து வைக்கவில்லை. 2019ல் என்ன செய்தார்களோ, அதே பார்முலாவோடுதான் இறங்கியுள்ளனர்.
பாஜக பெரிய அளவில் வெற்றி பெரும் எனக் கட்சியில் இருப்பவர்கள் கூடச் சொல்லவில்லை என்றால் எப்படி. திமுக வெற்றி பெறும் எனக் கூறுவதால், அவர்களுக்கு ஆதரவு, அவர்கள் வெற்றி பெற்றால் தேனும் பாலும் ஓடும் எனக் கூறவில்லை. எங்க ஊரில் வெள்ளத்தின் போது சாக்கடை தான் ஓடியது.
நான் ஒரு வலதுசாரி சிந்தனையாளர்தான், ஆனால் திமுகவுக்கு ஆதரவு கிடையாது. திமுகவுக்கு ஆதரவு இல்லை என்றால், பாஜகவுக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்குத் தான் ஆதரவு, நான் மோடிக்குத் தான் ஓட்டு போடுவேன். பிரதமர் மோடிதான் மீண்டும் வருவார். மீண்டும் மோடி வேண்டும் மோடி அதைத் தான் நானும் நினைக்கிறேன். பிடிக்குதோ பிடிக்கவில்லையோ பாஜகவுக்குத் தான் ஓட்டு. பாஜக கட்சி உறுப்பினர் இல்லை, அப்படியே இருந்தாலும் கட்சித் தலைமையைப் பற்றிப் பேசக்கூடிய உரிமை எனக்கில்லை. கேள்வி கேட்பது உங்கள் உரிமை ஆனால் கருத்து நான் சொல்ல முடியாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ஜாபர் சாதிக்குடன் மு.க.ஸ்டாலினின் குடும்பத்திற்கு தொடர்பு உள்ளது" - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!