தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வெத்தல போட்ட சோக்குல நான் கப்புனு குத்துனேன் மூக்குல' - பாட்டு பாடி நடிகர் கார்த்திக் பிரச்சாரம்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Actor Karthik: ‘வெத்தல போட்ட சோக்குல..’ என்னும் அமரன் பட பாடலைப் பாடி, அண்ணாமலையை விமர்சித்து, கோவை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்கு ஆதரவாக நடிகர் கார்த்திக் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

Actor Karthik
நடிகர் கார்த்திக்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 3:11 PM IST

நடிகர் கார்த்திக் பிரச்சாரம்

கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து, நடிகர் கார்த்திக் சூலூர் அண்ணா சீரணி கலையரங்கம் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "அண்ணாமலை போன்றோர் எதற்காக ஐபிஎஸ் பணியை விட்டுவிட்டு, அரசியலுக்கு வந்தார்கள் எனத் தெரியவில்லை.

ஆனால், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக சிங்கை ராமச்சந்திரன் தனது பணியை உதறிவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார். எனவே, அனைவரும் அவரை வெற்றி பெறச் செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்" எனத் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் அனைவரும், 'வெத்தல போட்ட சோக்குல' என்ற அமரன் திரைப்படப் பாடலை பாடுமாறு நடிகர் கார்த்திக்கிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து, வெத்தல போட்ட சோக்குல பாடலை பாடிய நடிகர் கார்த்திக், 'கப்புனு குத்தினேன் மூக்குல வந்தது பாரு ரத்தம்' என்ற வரிகளை பாடிவிட்டு, அந்த ரத்தம் யாருக்கு வந்தது என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார். அதற்கு அதிமுக தொண்டர்கள், “அண்ணாமலைக்கு தான்” என கூச்சலிட்டனர். இதையடுத்து, தொடர்ந்து பேசிய நடிகர் கார்த்திக், சோடா பாட்டிலுக்கு பதிலாக இரட்டை இலை சின்னத்தில் மை வைத்து வாக்களியுங்கள் எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கோவை நாடாளுமன்றத் தொகுதியில் 100க்கு 200 சதவிகிதம் அதிமுக வெற்றி பெறும். அண்ணாமலை ஒவ்வொன்றையும் கவன ஈர்ப்புக்காக செய்து வருகிறார். பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசுகிறார். அது அவரின் தனிப்பட்ட விவகாரம். கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில், திமுக அரசின் மின்கட்டண உயர்வால் சிறு, குறு தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

விசைத்தறிகள் அனைத்தும் பழைய இரும்புக்கு விற்கப்பட்டு வருகின்றன. திமுக அரசு, கடந்த 3 ஆண்டுகளில் சிறு, குறு தொழில்களின் நலனுக்காக எதுவும் செய்யவில்லை. கடந்த 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக நூல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட விவகாரங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவும், மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் திமுகவும், இதுவரை எதுவும் செய்யாமல் தேர்தல் வந்தவுடன் அதை செய்கிறேன், இதை செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.

தொழில்கள் அனைத்தும் அழிந்த பிறகு, வாக்குறுதிகள் கொடுத்து என்ன பிரயோஜனம்? இதற்கெல்லாம் அண்ணாமலையும், கணபதி ராஜ்குமாரும் பதில் சொல்வார்களா? எடப்பாடி பழனிசாமியின் நிழலாக இருந்து செயல்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் வேலுமணி, கொங்கு மண்டலம் முழுவதும் நான்கைந்து நாடாளுமன்றத் தொகுதிகளை கவனிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இருப்பதால், அது பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி யாருக்கு.. களம் யாருக்கு சாதகம்? - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details