கோயம்புத்தூர்:கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொண்டாமுத்தூர், மருதமலை, தடாகம், நரசீபுரம் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.
இதனால் உணவு மற்றும் தண்ணீர் உலா வரும் காட்டு யானை, குடியிருப்புகளையும், விளைநிலங்களையும் சேதப்படுத்திச் செல்கிறது. வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தாலும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு 9:30 மணியளவில் தொண்டாமுத்தூர் மத்திபாளையம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒரு வீட்டின் கிரில் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் யானை வீட்டின் உள்ளே நுழைந்ததைக் கண்டு கூச்சலிட்டனர்.
தொடர்ந்து வீட்டின் சுற்றுச் சுவரை யானை தாண்ட முயற்சி செய்தது. இதனால் சுவர் இடிந்து சுக்கு நூறானது, பின்னர் அப்பகுதியில் இருந்து யானை சென்றது. கடந்த சில நாள்களுக்கு முன்தான், குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானையை, விரட்டி சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழந்தார்.