சென்னை:கடந்த 2011-2015-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக, 1 கோடியே 62 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் ஆகிய மூவரும் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரில், செந்தில் பாலாஜி அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் ஆகிய நால்வர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்படது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டு விட்டதாக கூறி வழக்கை முடித்து வைத்தது.
உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், "பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தால் மட்டுமே சமரசம்" ஏற்பட முடியும். சமரசம் ஏற்பட்டதால் பணம் கைமாறியது உறுதியாகிறது. அதனால், மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, வருமானவரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்தனர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 2023ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினர் செய்தனர்.
ஜாமீன் நிராகரிப்பு:இதையடுத்து, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரது சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் கூறி ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
இறுதியாக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டுத் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பிறகு ராஜினாமா செய்துள்ளார். தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், சமூகத்தில் அதிகாரம் படைத்தவராக இருப்பதால் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்தது.