சென்னை: கேரள மாநிலம் ஆனைகட்டி கோட்டத்துறை பகுதியில் உமா பிரேமன் என்பவர் அப்துல் கலாம் பெயரில் இலவச பள்ளி ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த பள்ளியில் அட்டப்பாடியை சுற்றியுள்ள பழங்குடியின கிராமங்களைச் சார்ந்த 150 மாணவர்கள் தங்கி இலவச கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த மாணவர்களுக்கு அடிப்படை கல்வியை கற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களிடம் உள்ள தனித் திறமைகளைக் கண்டறிந்து, அதற்குத் தகுந்தவாறு அவர்களைத் தயார் செய்தும் வருகிறார் உமா பிரேமன். அந்த வகையில், இங்குப் பயிலும் மாணவர்களுக்குப் பழங்குடியின பாடல்கள் மற்றும் இசைக் கருவிகளை இசைக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்குக் குறும்படம் எடுக்கவும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த பயிற்சியைப் பெற்ற மாணவர்கள் இதுவரை ஒரு ஆல்பம் சாங்கையும், குறும்படத்தையும் தயாரித்து இயக்கி உள்ளனர். இவ்வாறு இவர்கள் தயாரித்து இயக்கிய 'மிஸ்ஸிங் சாப்டர்' (Missing chapter) எனும் முதல் குறும்படமானது, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய குறும்பட விழாவில் போட்டிக்குத் தேர்வாகி பாராட்டுகளைப் பெற்றது.